×

கருணை அடிப்படையில் 53 பேர் பணி நியமனம் ரூ.7.20 கோடியில் கட்டப்பட்ட 3 சேமிப்பு கிடங்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் சார்பில் ரூ.7.20 கோடியில் கட்டப்பட்ட 3 கிடங்குகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் 60 இடங்களில் 269 கிடங்குகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவன கிடங்குகளில், விவசாயிகள், வியாபாரிகளின் விவசாய விளைபொருட்கள், விதைகள், உரங்கள் சேமித்து வைக்கப்பட்டு அதற்கான ரசீது வழங்கப்படுகிறது. மேலும், அரசு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களால் சேமிக்கப்படும் பொருட்களையும் இருப்பில் வைத்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2021-22ம் ஆண்டிற்கான உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானிய கோரிக்கையில், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதலாக 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிட்டங்கி நிறுவப்படும் என்றும், கடந்த 2022-23ம் ஆண்டிற்கான உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானிய கோரிக்கையில், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் சார்பில் ராணிப்பேட்டை மற்றும் திருமங்கலம் சேமிப்பு கிடங்கு வளாகங்களில் காலியாகவுள்ள இடத்தில் கூடுதலாக 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய சேமிப்பு கிடங்குகள் கட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டம், திருவப்பூரில் ரூ.2.80 கோடி செலவில் 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 1 கிடங்கு, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் ரூ.2.20 கோடி செலவில் 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 1 கிடங்கு மற்றும் மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், கப்பலூர் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் ரூ.2.20 கோடியில் 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 1 கிடங்கு, என மொத்தம் ரூ.7.20 கோடியில் கட்டப்பட்டுள்ள 3 கிடங்குகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மேலும், திருப்பூர் மாவட்டம் – பல்லடம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம்- குனிச்சி ஆகிய இடங்களில் ரூ. 6.40 கோடியில் 3400 மெட்ரிக் டன் கொள்ளளவுடன் கட்டப்படவுள்ள 2 சேமிப்பு கிடங்குகள் கட்டும் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 53 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ரங்கநாதன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ஜகந்நாதன், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பழனிசாமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் அண்ணாதுரை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

The post கருணை அடிப்படையில் 53 பேர் பணி நியமனம் ரூ.7.20 கோடியில் கட்டப்பட்ட 3 சேமிப்பு கிடங்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : 3 Storage Warehouses ,Chief Minister ,BC ,G.K. Stalin ,Chennai ,CM M ,Tamil Nadu Storage Warehouse Company ,CM ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...