×
Saravana Stores

சோழிங்கநல்லூரில் 35 வருடங்களாக ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1,860 கோடி மதிப்புள்ள 62.17 ஏக்கர் அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிரடி

சென்னை: சென்னை சோழிங்கநல்லூரில் கடந்த 35 வருடங்களாக தனி நபர்கள் ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் ரூ.1860 கோடி மதிப்புள்ள 62.17 ஏக்கர் அரசு புறம்போக்கு தரிசு நிலத்தை நீதிமன்றத்தின் உத்தரவின்படி வருவாய் துறையினர் மீட்டனர். சென்னை ராஜிவ் காந்தி சாலையில் இருந்து செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு செல்லும் பிரதான சாலையில், சோழிங்கநல்லூர் கிராமம் புலன் எண்.574 வகைப்பாடு அரசு புறம்போக்கு தரிசு நிலம் கடந்த 35 வருடங்களாக தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் துறை அதிகாரிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு வந்தபோது அனைத்து ஆவணங்களும் முறையாக அரசு புறம்போக்கு தரிசு நிலம் என்பதை உறுதிப்படுத்துவதாகவும், இந்த இடம் அரசுக்கு சொந்தமாக இடம் என்றும், அந்த இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து உடனடியாக மீட்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் சிவகுமார் தலைமையில், ஆக்கிரமிப்பாளர்களிடம் இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள். இந்த இடம் அரசுக்கு சொந்தமானது. இதை இடிக்க போகிறோம் என்று துண்டு பிரசுரம் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தென்சென்னை கோட்டாட்சியர் அருளானந்தன், சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் சிவகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடு, கடை ஆகியவற்றை அகற்றி நிலத்தை மீட்டெடுத்தனர். மீட்கப்பட்ட 62.17 ஏக்கர் இடத்தின் மதிப்பு சுமார் ரூ.1860 கோடி என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்க இடம் தேர்வுசெய்து வரும் நிலையில், சென்னை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு காரர்களிடமிருந்து மீட்டெடுத்துள்ளனர்.

The post சோழிங்கநல்லூரில் 35 வருடங்களாக ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1,860 கோடி மதிப்புள்ள 62.17 ஏக்கர் அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிரடி appeared first on Dinakaran.

Tags : Chozinganallur ,Revenue Department ,Chennai ,Choshinganallur ,
× RELATED தமிழ்நாட்டில் 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்