×

ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட 3386 ஏக்கர் கோயில் சொத்துகளின் விவரம் அடங்கிய இரண்டாவது புத்தகம் வெளியீடு: அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட கோயில் சொத்துகளின் விவரம் அடங்கிய இரண்டாவது புத்தகத்தை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட கோயில்களின் சொத்துகள் விவரம் அடங்கிய இரண்டாவது புத்தகத்தை வெளியிட்டார்.

பின்னர், அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: 2021ம் ஆண்டு மே 7ம் தேதி முதல் 2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிவரை முதற்கட்டமாக 167 கோயில்களுக்கு சொந்தமான ரூ.2,566.94 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டு, அதுகுறித்த முதல் புத்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022ம் ஆண்டு மே17ம் தேதி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, தற்போது வெளியிடப்பட்டுள்ள இரண்டாவது புத்தகத்தில் 2022ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிமுதல் கடந்த மார்ச் 31ம் தேதி வரையிலான காலத்தில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட 330 கோயில்களுக்குச் சொந்தமான ரூ.1,692.29 கோடி மதிப்பிலான 3386.06 ஏக்கர் நிலம், மனை, கட்டடம் மற்றும் குளம் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

2021ம் ஆண்டு மே 7ம் தேதி முதல் நேற்று முன்தினம்(செப்.7ம் தேதி) வரை 653 கோயில்களுக்கு சொந்தமான ரூ.5,171 கோடி மதிப்பீட்டிலான 5,721.19 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்ப கருவியான டிஜிபிஎஸ் ரோவர் கருவி மூலம் 1,48,956.20 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்து பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த அளவீடு பணி 1.50 லட்சம் ஏக்கரை எட்டும் நிகழ்வினை தர்மபுரியில் சிறப்பாக நடத்தவுள்ளோம். மேலும், ஆக்கிரமிப்புகளை மீட்டெடுத்தது குறித்த மூன்றாவது புத்தகம் வரும் ஜனவரி 2024 க்குள் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட 3386 ஏக்கர் கோயில் சொத்துகளின் விவரம் அடங்கிய இரண்டாவது புத்தகம் வெளியீடு: அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekhar Babu ,Chennai ,Minister Shekharbabu ,Hindu Religious Endowments Department ,
× RELATED இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று...