×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தினந்தோறும் விசாரணை: சாத்தியக்கூறுகளை ஆராய மதுரை நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தல்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணையை தினசரி அடிப்படையில் விசாரிப்பது குறித்து ஆராய வேண்டுமென கூறியுள்ள ஐகோர்ட் கிளை, எஸ்ஐயின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 2020ல் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வியாபாரிகளான ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இவ்வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஸ்ரீதர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், ஏட்டு முருகன், சாமத்துரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக சிபிஐ போலீசார், மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை தற்ேபாது நடந்து வருகிறது. இதனிடையே, இந்த வழக்கில் ஜாமீன் கோரி, எஸ்ஐ ரகுகணேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் மீண்டும் மனு செய்தார். அதில், தனக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. எனவே, ஜாமீன் வழங்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி கே.முரளிசங்கர் விசாரித்தார். ஜெயராஜின் மனைவி செல்வராணி தரப்பில் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து மனு செய்யப்பட்டது.

சிபிஐ வழக்கறிஞர் முத்துசரவணன் ஆஜராகி, இந்த கொலை வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் 3 மாதத்தில் விசாரணை முடிந்து விடும் என்பதால் ஜாமீன் வழங்க வேண்டியதில்லை என வாதிட்டிருந்தார். இதையடுத்து இந்த மனுவின் மீது உரிய உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறிய நீதிபதி, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். இந்த மனுவின் மீது நேற்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, வழக்கின் தீவிரத்தன்மை கருதியும், ஜாமீன் வழங்குவதற்கு உரிய சூழலும் இல்லாததால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதே நேரம் மதுரை நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை தினசரி அடிப்படையில் விசாரிப்பதன் சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர்.

The post சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தினந்தோறும் விசாரணை: சாத்தியக்கூறுகளை ஆராய மதுரை நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Satankulam ,Madurai ,Sadankulam ,Madurai court ,Dinakaran ,
× RELATED புகையிலை பொருட்கள் விற்றதாக 3 பேர் கைது