×

இந்தியாவின் பெருமை

டெல்லியில் இன்று துவங்கும் ஜி20 உச்சி மாநாடு சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இம்மாநாட்டில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்பட 20 நாடுகளின் தலைவர்களும், பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொள்கின்றனர். ‘ஜி-20’ என்ற பெயரில் இருந்தே தெளிவாக தெரிவதுபோல, இது 20 நாடுகளின் குழுவாகும். கடந்த 1999-ம் ஆண்டு ஆசியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, அனைத்து நாடுகளின் நிதி அமைச்சர்களும் மத்திய வங்கி ஆளுநர்களும் ஒன்றிணைந்து உலகப்பொருளாதாரம் மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து விவாதிக்கக்கூடிய ஒரு மன்றத்தை உருவாக்க முற்பட்டனர்.

அதற்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு, 2007-ல், பொருளாதார மந்தநிலையின் நிழல் உலகம் முழுவதும் பரவியது. அத்தகைய சூழ்நிலையில், நிதியமைச்சர்கள் மட்டத்தில் இருந்த ஜி-20 குழு மேம்படுத்தப்பட்டு, அது நாடுகளின் தலைவர்களை உள்ளடக்கிய குழுவாக மாற்றப்பட்டது. அந்த வகையில், ஜி-20 அமைப்பின் முதல் மாநாடு 2008-ம் ஆண்டு அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்தது. இதுவரை மொத்தம் 17 மாநாடுகள் நடந்துள்ளன. சுழற்சி முறையில் 18-வது உச்சி மாநாடு இன்று இந்தியாவில் நடக்கிறது.

இந்த குழுவின் கவனம், பொருளாதாரம் தொடர்பான பிரச்னைகளை விவாதிப்பதாக இருந்தாலும், காலப்போக்கில் அதன் நோக்கம் விரிவடைந்து, நிலையான வளர்ச்சி, சுகாதாரம், விவசாயம், எரிசக்தி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் ஊழல் எதிர்ப்பு போன்ற விஷயங்களும் சேர்க்கப்பட்டன. ஜி-20 குழுவில் அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து ஆகிய 19 நாடுகள் உள்ளன.

இவற்றோடு ஐரோப்பிய ஒன்றியம் இந்தக் குழுவில் 20வது உறுப்பினராக உள்ளது. இக்குழுவில் இடம் பெற்றுள்ள நாடுகளின் பெயர்களை பார்த்தாலே, இந்த குழுவின் பலம் என்னவென்று நமக்கு தெரியும். எந்த நாடு ஜி-20யின் தலைவர் பதவியில் இருக்கிறதோ, அந்த ஆண்டில் அந்நாடு ஜி-20 கூட்டங்களை ஏற்பாடு செய்கிறது. அந்த வகையில் இந்தியா, இம்முறை இம்மாநாட்டை நடத்துகிறது. அத்துடன், விதிமுறைகளின்படி, வங்கதேசம், எகிப்து, மொரிஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின், மற்றும் ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

ஜி-20 குழுவின் உறுப்பு நாடுகள், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதமும், உலக வர்த்தகத்தில் 75 சதவீதமும், உலக மக்கள் தொகையில் 3-ல் 2 பங்கையும் அதன் உறுப்பு நாடுகள் கொண்டிருப்பதில் இருந்து இதன் வலிமையை நாம் மதிப்பிட முடியும். இவ்வாறான நிலையில், இந்த மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்கள் உலகப்பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. இத்தகைய ஒரு மாநாடு இந்தியாவில் நடப்பது, இந்தியாவில் இருக்கும் தொழில்நுட்ப முன்னேற்றம், உட்கட்டமைப்பு, மற்றும் திறன்மிக்க மனிதவளம் ஆகியவற்றை உறுப்பு நாடுகள் அறிந்துகொள்ள ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு ஆகும். இம்மாநாடு 2 முக்கிய வழிகளில் இந்தியாவுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒன்று இது இந்தியாவின் பலத்தையும், இந்தியா அடைந்திருக்கும் முன்னேற்றத்தையும் உலக நாடுகள் அறிந்துகொள்ள ஒரு சிறந்த வழியாக இருக்கும். இரண்டாவது இந்தியாவின் நேர்மறையான பிம்பத்தை வலுப்படுத்தும். ஒட்டுமொத்தத்தில் இது, இந்தியாவுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமை.

The post இந்தியாவின் பெருமை appeared first on Dinakaran.

Tags : India ,G20 Summit ,Delhi ,United States ,Britain ,Canada ,of India ,Dinakaran ,
× RELATED பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால்...