×

அரசு துணை சுகாதார நிலைய பகுதியில் ராட்சத கற்பூர மரங்களால் விபத்து அபாயம்: அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

ஊட்டி: ஊட்டி அருகே உள்ள கேத்தி கெரடா அரசு துணை சுகாதார நிலையம் சுற்றிலும் வளர்ந்துள்ள ராட்சத கற்பூர மரங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது எரிபொருட்களுக்காக பல்வேறு பகுதிகளிலும் கற்பூர மரங்கள் நடவு செய்யப்பட்டன. தொடர்ந்து வனத்துறையினரும் சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் அனைத்து பகுதிகளிலும் இந்த கற்பூரம் மரக்கன்றுகளை நடவு செய்தனர். தற்போது இவைகள் மிக உயரமாக வளர்ந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. குறிப்பாக குடியிருப்புகளை ஒட்டிய பகுதிகள், மருத்துவமனை மற்றும் பள்ளிகள், அரசு துறை அலுவலக வளாகங்களில் இந்த மரங்கள் அதிக அளவு காணப்படுவதால், மழைக்காலங்களில் அவை விழுந்து விபத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதில், குறிப்பாக குடியிருப்பு அருகில் உள்ள மரங்களையும், அரசு மருத்துவமனை அருகில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், ஊட்டி அடுத்த கேத்தி கெரடா பகுதியில் உள்ள அரசு துணை சுகாதார நிலையம் அருகே ஏராளமான ராட்சத கற்பூர மரங்கள் வளர்ந்துள்ளன. இப்பகுதியில் காற்றுடன் கனமழை பெய்தால், மரம் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. இதனால், அங்கு பணி புரியும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ராட்சத கற்பூர மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post அரசு துணை சுகாதார நிலைய பகுதியில் ராட்சத கற்பூர மரங்களால் விபத்து அபாயம்: அகற்ற பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Cathy ,Kerada Government ,Sub Health Station ,Feedi ,Station ,Dinakaran ,
× RELATED சில்லி பாய்ன்ட்…