×

நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள ஓட்டல்களில் பயணிகளுக்கு அதிகவிலைக்கு உணவு விற்றால் புகார் தெரிவிக்கலாம்: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்

வேலூர்: நெடுஞ்சாலை ஓரங்களில் உணவுக்காக பஸ்கள் நிறுத்தம் ஓட்டல்களில் அதிக விலைக்கு விற்பனை செய்தால் புகார் தெரிவிக்கலாம் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் சென்னை, விழுப்புரம், சேலம், கோவை, திருச்சி, மதுரை, கும்பகோணம், திருநெல்வேலி என்று 8 கோட்டங்களாக செயல்பட்டு வருகிறது. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நெடுந்தூர பஸ்களில் ஒன் டூ ஒன், எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், பாய்ண்ட் டூ பாயண்ட் போன்ற பெயர்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நெடுந்தூரம் செல்லும் பஸ்கள் உணவுக்காக சாலையோரமுள்ள ஓட்டல்களில் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு நிறுத்தப்படும் ஓட்டல்களில் மற்ற ஓட்டல்களை காட்டிலும் உணவுப்பொருட்களின் விலை அதிகமாகவும், உணவு தரமில்லாமலும் சுகாதாரமற்ற முறையிலும் இருப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டு ஏற்பட்டு வருகிறது.

மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இல்லை. கழிவறைக்கு அதிகக்கட்டணம் வசூல் செய்வது, வாங்கும் பொருட்களுக்கு கணினி ரசீது கொடுப்பதில்லை, சம்பந்தப்பட்ட ஓட்டல்களில் டிரைவர், கண்டக்டர்களுக்கு தனி அறையில் உணவு அருந்த இடம் கொடுத்தல், சில ஓட்டல்களில் இலவசமாக உணவு வழங்குவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக சில டிரைவர், கண்டக்டர்கள் தரமில்லாத ஓட்டல்களில் பஸ்களை நிறுத்துவதாக பயணிகள் தரப்பில் போக்குவரத்து கழகத்திற்கு புகார்கள் சென்றது. இந்நிலையில் நெடுந்தூரம் செல்லும் பஸ்கள் ஒவ்வொரு வழித்தடத்தில் எந்தெந்த ஓட்டல்களில் நிறுத்த வேண்டும் என்று போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பட்டியலில் உள்ள ஓட்டல்களில்தான் பஸ்கள் நிறுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு அறிவிக்கப்பட்ட பஸ்கள் நிறுத்தம் ஓட்டல்களில் உணவு உள்பட பல்வேறு குறைகள், புகார்கள் இருந்தால் அதுகுறித்து தெரிவிக்க போக்குவரத்து கழகம் பயணிகள் உதவி எண்ணை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் நெடுந்தூரம் செல்லும் பஸ்கள் எந்தெந்த ஓட்டல்களில் நிறுத்த வேண்டும் என்று போக்குவரத்து கழகம் பட்டியலை அறிவித்துள்ளது. அந்த ஓட்டல்களில்தான் பஸ்சை நிறுத்த வேண்டும் என்று டிரைவர், கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை மீறி தங்களுக்கு சாதகமான ஓட்டல்களில் பஸ்களை நிறுத்தினால் புகார் தெரிவிக்கலாம். மேலும் அறிவிக்கப்பட்ட ஓட்டல்களில் கழிவறைக்கு கட்டணம் வசூலிப்பது, நிர்ணயித்ததைவிட அதிக விலைக்கு விற்பனை செய்வது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்காதது, கணினி ரசீது கொடுக்கப்படாதது போன்ற குறைகள் இருந்தால் அதுகுறித்து பயணிகள் புகார் தெரிவிக்கலாம். இதற்காக 1800 599 1500 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.

இந்த எண் பஸ்சின் உள்பகுதி, பஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. புகார் கூறும் பஸ்சின் நெம்பர், எந்த ஊரிலிருந்து எந்த ஊருக்கு செல்கிறது. பஸ்சில் என்ன குறைபாடு என்று தெரிவித்தால்,அந்த புகார் சென்னையில் உள்ள தலைமை போக்குவரத்துக்கழக பணிமனைக்கு செல்லும். அப்புகாரின் அடிப்படையில் சம்பந்தமான ஓட்டல்களுக்கு போக்குவரத்து கழக அதிகாரிகள் உடனடியாக சென்று ஆய்வு செய்வார்கள். அதேபோல் பஸ்சில் உள்ள குறைபாடுகள் குறித்தும் சம்பந்தப்பட்ட பணிமனைக்கு தெரிவிக்கப்படும். குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள ஓட்டல்களில் பயணிகளுக்கு அதிகவிலைக்கு உணவு விற்றால் புகார் தெரிவிக்கலாம்: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Transport Department Officials ,Vellore ,
× RELATED சிறுபாசன ஏரிகளுக்கு நீர் செல்ல...