சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாடுகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியைவிட்டு வெளியேறும் சிறுத்தைகள் கிராமங்களில் புகுந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலை பகுதி பேடர்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜப்பா (42) என்பவர் 15க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ராஜப்பா வழக்கம்போல ஆடுகளை தனது வீட்டின் முன்பு உள்ள ஆட்டு கொட்டகையில் அடைத்து விட்டு உறங்க சென்றுவிட்டார். நேற்று காலை வந்து பார்த்தபோது பட்டியில் இருந்த 12 வெள்ளாடுகள் கழுத்து மற்றும் காது பகுதிகளில் ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்தன.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜப்பா மற்றும் ஊர் பொதுமக்கள் உடனடியாக கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடம்பூர் வனத்துறையினர் ஆடுகளை வேட்டையாடியது சிறுத்தையா? என ஆய்வு செய்தனர். அப்போது சிறுத்தையின் கால் தடம் ஏதும் பதிவாகவில்லை என்பது தெரியவந்தது. எனவே ஏதாவது மர்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்தனர். உயிரிழந்த ஆடுகளின் உடல்களை கால்நடை மருத்துவர் மூலம் உடற்கூராய்வு செய்து அதற்குரிய சான்றிதழ் பெற்று இழப்பீடு வழங்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர். ஊருக்குள் புகுந்த மர்ம விலங்கு ஆடுகளை கொன்ற சம்பவம் மலைக்கிராம மக்களை அச்சத்திலும் அதிர்ச்சியிலும் உறைய வைத்துள்ளது.
The post சத்தியமங்கலம் அருகே மர்ம விலங்கு கடித்து 12 ஆடுகள் பலி appeared first on Dinakaran.