×

புதுக்கோட்டை அருகே பரபரப்பு; அரசு பஸ் மீது சரமாரி கல்வீச்சு: டிரைவர்-கண்டக்டர் படுகாயம்


* போதை நபரை வழியில் இறக்கிவிட்டதால் 7 பேர் கும்பல் ஆத்திரம்

புதுக்கோட்டை: தூத்துக்குடியிலிருந்து நாகர்கோவிலுக்கு சென்ற அரசு பஸ் மீது புதுக்கோட்டையில் 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரி கற்களை வீசியது. இதில் டிரைவர், கண்டக்டர் படுகாயம் அடைந்தனர். போதை நபரை வழியில் இறக்கி விட்டதால் கல்வீச்சில் ஈடுபட்ட 7 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடியிலிருந்து நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு நேற்றிரவு 10 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை நாகர்கோவில், கே.என். நகரைச் சேர்ந்த சணல்குமார் (50) என்பவர் ஓட்டினார். அதே ஊர், அம்மாஞ்சிவிளையைச் சேர்ந்த தனசேகர் (49) என்பவர் கண்டக்டராக இருந்தார். இந்த பஸ் புதுக்கோட்டை நிறுத்தத்தில் நின்ற போது 7 பேர் சேர்ந்து, ஒரு நபரை பஸ்சில் ஏற்றி விட்டனர். அவர் கடும் போதையில் இருந்தார்.

அவரிடம் எந்த ஊருக்கு டிக்கெட் வேண்டும்? என்று கண்டக்டர் கேட்ட போது, அவர் கண்டக்டரை அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதையடுத்து அந்த போதை நபரை வாகைக்குளம் அருகே கண்டக்டர் இறக்கி விட்டார். இதையடுத்து அந்த போதை நபர், அவரை ஏற்றி விட்ட நண்பர்கள் 7 பேருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அந்த 7 பேரும் 3 பைக்குகளில் அந்த பஸ்சை விரட்டி முந்திச் சென்று நிறுத்தினர். பின்னர் பஸ் மீது சரமாரியாக கற்களை வீசினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்கு நூறாக நொறுங்கியதில், டிரைவருக்கும், கண்டக்டரும் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்த புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டிரைவரையும், கண்டக்டரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, பஸ் மீது கற்களை வீசிய 7 பேர் கும்பலை புதுக்கோட்டை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி அருகே அரசு பஸ் மீது கல்வீசிய சம்பவம், டிரைவர், கண்டக்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post புதுக்கோட்டை அருகே பரபரப்பு; அரசு பஸ் மீது சரமாரி கல்வீச்சு: டிரைவர்-கண்டக்டர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Pudukkoda ,Pudukkotta ,Thutukudi ,Nagarkou ,Dinakaran ,
× RELATED ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்...