பழநி: பழநி அடிவாரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பாக கோட்டாட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தமிழ்நாட்டில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, நவராத்திரி, கந்த சஷ்டி போன்ற திருவிழாக்கள் நடைபெறும். சராசரியாக 1 வருடத்தில் சுமார் 1.20 கோடி பக்தர்கள் பழநி கோயிலில் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும் முகூர்த்த நாட்கள், விடுமுறை தினம் மற்றும் திருவிழா காலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.
இந்த நேரங்களில் அடிவார பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும். இதனை சரிசெய்வது தொடர்பாக நேற்று கோட்டாட்சியர் சரவணன், நகராட்சி ஆணையர் பாலமுருகன், பழநி கோயில் உதவி ஆணையர் லட்சுமி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயகவுரி, தாசில்தார் பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் பழநி நகரில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், அடிவார பகுதியில் உள்ள சாலையோர கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
பழநி நகர் மற்றும் அடிவார பகுதிகளில் உள்ள சில சாலைகளை ஒருவழிப்பாதையாக மாற்ற வேண்டும். அடிவாரத்தில் கிரிவீதி உள்ளிட்ட சில சாலைகளில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்க வேண்டுமென உத்தேசிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post பழநி அடிவாரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆய்வு appeared first on Dinakaran.