புதுடெல்லி: இந்திரா காந்தி, ராஜீவ் காந்திக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்த பார்முலா ஒர்க்கவுட் ஆன நிலையில், தற்போதைய பாஜக அரசை வீழ்த்துவதற்கு இந்தியா கூட்டணியால் முடியுமா? என்பது குறித்து பரபரப்பு தகவலை பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். நாடு முழுவதும் மாநில சட்டசபை முதல் லோக்சபா தேர்தல் வரை பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வெற்றிக்கு வியூகம் வகுத்து கொடுத்தவரும், ‘ஜான் சுராஜ்’ என்ற அமைப்பின் தலைவருமான பிரசாந்த் கிஷோர், பிரபல செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் சூட்டியது, பாஜகவுக்கு எதிரான மாஸ்டர் ஸ்ட்ரோக்கா? என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். ‘இந்தியா’ என்ற பெயர் பிராண்டிங் அடிப்படையில் பார்த்தால் நன்றாக தான் உள்ளது. எதிர்கட்சிகளின் கூட்டணியை ‘இந்தியா’ என்று அழைப்பது புத்திசாலித்தனமானதாகவும் உள்ளது. ஆனால் அந்த கூட்டணியால் தேர்தலில் வெற்றி பெற முடியுமா? என்பது கேள்வியாக தான் உள்ளது. ‘மகா கூட்டணி’ என்ற வார்த்தை கடந்த 2015ம் ஆண்டுக்கு முன்பு பயன்படுத்தவில்லை. இந்த வார்த்தையானது முதன் முதலாக பீகாரில் பயன்படுத்தப்பட்டது.
‘இந்தியா’ கூட்டணியை பொறுத்த வரையில், எதிர்க்கட்சிகளின் பார்வையில் நன்றாக தான் உள்ளது. எதிர்கட்சிகள் ஒன்றுபட்டால், தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்பது சாத்தியமில்லை. எல்லோரும் ஒன்று சேர்ந்தாலும் கூட, இன்னும் அவர்கள் நீண்ட தூரம் பயணம் செல்ல வேண்டியிருக்கிறது. ‘இந்தியா’ கூட்டணிக்கு இன்னும் அரசியல் ரீதியான சரியான கதையின் ‘கரு’ கிடைக்கவில்லை. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைத் தோற்கடிக்க, அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்தன. முன்னாள் பிரதமர் வி.பி.சிங், அனைத்து கட்சிகளுடன் சேர்ந்து முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அரசை தோற்கடித்தார்.
அந்த காலகட்டத்தில் எமர்ஜென்சி, ஜேபி இயக்கம், போஃபர்ஸ் போன்ற பிரச்னைகள் முக்கியமாக பேசப்பட்டன. அதனால் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்தன. அவர்களுக்கு வெற்றியும் கிடைத்தது. ஆனால் தற்போது உருவாக்கியுள்ள ‘இந்தியா’ கூட்டணிக்கு இன்னும் கதையின் ‘கரு’ கிடைக்கவில்லை. அதாவது அவர்கள் எழுப்பும் பிரச்னைகளில் அடிப்படை ஏதும் இல்லை. அதேநேரம் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பெரும் ஓட்டு சதவீதத்தின்படி ஆட்சியமைக்க முடியும் என்கின்றனர். ஆனால் அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை. பாஜகவிற்கு செல்லும் வாக்குகளை ‘இந்தியா’ கூட்டணி பெற வேண்டும் என்றால், அவர்கள் புதியதாக கதையின் ‘கருவை’ கண்டுபிடிக்க வேண்டும். அவ்வாறு புதிய கதையின் கருவை கொண்டு வராத வரை எதிர்கட்சிகளால் பாஜகவை வீழ்த்த முடியாது’ என்று கூறினார்.
The post இந்திரா காந்தி, ராஜீவ் காந்திக்கு பயன்படுத்திய பார்முலா பாஜக அரசை ‘இந்தியா’ கூட்டணி வீழ்த்துமா?: பிரசாந்த் கிஷோர் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.