×

ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட சொத்துகளின் விவரம் அடங்கிய இரண்டாவது புத்தகம் வெளியீடு: சென்னையில் அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட திருக்கோயில் சொத்துகளின் விவரம் அடங்கிய இரண்டாவது புத்தகம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். இதுவரை 5,721.19 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிமுதல் கடந்த மார்ச் 31ம் தேதி வரையிலான காலத்தில் அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட கோயில்களின் சொத்துகள் விவரம் அடங்கிய இரண்டாவது புத்தகத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று வெளியிட்டார். பின்னர், அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: நமது பண்பாட்டுச் சின்னங்களாக திகழும் திருக்கோயில்களை மேம்படுத்திடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை தொன்மை வாய்ந்த திருக்கோயில்களை புனரமைத்தல், குடமுழுக்கு நடத்துதல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல், திருக்கோயில் சொத்துகளை அளவீடு செய்து பாதுகாத்தல் போன்ற பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற 2021ம் ஆண்டு மே 7ம் தேதிமுதல் 2022ம் ஆண்டு மார்ஸ் 31ம் தேதிவரை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட 167 திருக்கோயில்களின் ரூ.2,566.94 கோடி மதிப்பிலான சொத்துகள் குறித்த விவரங்களை தொகுத்து, வெளிப்படைத் தன்மையுடன் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் முதல் புத்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022ம் ஆண்டு மே17ம் தேதி வெளியிட்டார். அதனை தொடர்ந்து, கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிமுதல் கடந்த மார்ச் 31ம் தேதி வரையிலான காலத்தில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட திருக்கோயில் சொத்துகளின் விவரம், தனிநபர் பெயரிலும், கணினி சிட்டாவிலும் தவறுதலாக பதிவான பட்டா மாறுதல்களை சரிசெய்து திருக்கோயில்கள் பெயரில் மீண்டும் பட்டா மாறுதல் செய்யப்பட்ட விவரம் ஆகியவற்றை உள்ளடக்கிய இரண்டாவது புத்தகம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இப்புத்தகத்தில் கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிமுதல் கடந்த மார்ச் 31ம் தேதி வரையிலான காலத்தில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட 330 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.1,692.29 கோடி மதிப்பிலான 3386.06 ஏக்கர் நிலம், மனை, கட்டடம் மற்றும் திருக்குளம் விவரங்கள், நிலவுடைமை பதிவு மேம்பாட்டு திட்ட நடவடிக்கையின்போது தனிநபர் பெயரில் தவறுதலாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட நிலத்திற்கு மீண்டும் பட்டா பெற்ற 145 திருக்கோயில்களுக்குச் சொந்தமான 801.63 ஏக்கர் நிலங்களின் விவரம், கணினி சிட்டாவில் பதிவான தவறுகளை சரிசெய்து 180 திருக்கோயில்களுக்கு சொந்தமான 1,434.43 ஏக்கர் நிலங்களுக்கு திருக்கோயில் பெயரில் பட்டா பெற்ற விவரம், நவீன தொழில்நுட்ப கருவி மூலம் 74514.48 ஏக்கர் திருக்கோயில் நிலங்களில் அளவீடு செய்யப்பட்டுள்ள விவரம், அவற்றின் புகைப்படங்கள், அதுகுறித்து நாளிதழ்களில் வெளிவந்த செய்திகள் அனைத்தும் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.

இந்நூல்கள் எதிர்காலத்தில் கோயில்களின் சொத்துகளை பாதுகாக்க அடிப்படை ஆதாரமாக விளங்கும். கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்கும் பணிகளும், தனிநபர் பெயரிலும், கணினி சிட்டாவிலும் தவறுதலாக பதிவான பட்டா மாறுதல்களை சரிசெய்து திருக்கோயில்கள் பெயரில் மீண்டும் பட்டா மாறுதல் செய்யும் பணிகளும் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்தமாக, கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி முதல் நேற்று வரை 653 திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.5,171 கோடி மதிப்பீட்டிலான 5,721.19 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதோடு, நவீன தொழில்நுட்ப கருவியான டிஜிபிஎஸ் ரோவர் மூலம் 1,48,956.20 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்து பாதுகாக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் சங்கர், திருமகள், ஹரிப்ரியா, உயர்மட்ட ஆலோசனை குழு உறுப்பினர் தேச மங்கையர்க்கரசி, ஆலய நிலங்கள் தனி அலுவலர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் விஜயா, ஜானகி, குமரேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட சொத்துகளின் விவரம் அடங்கிய இரண்டாவது புத்தகம் வெளியீடு: சென்னையில் அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார் appeared first on Dinakaran.

Tags : Minister Shekhar Babu ,Chennai ,Hindu Religious Charities Department ,Dinakaran ,
× RELATED புரட்டாசி மாதத்தில் வைணவ...