×

சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையை எதிர்த்து உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரணை; அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி பதில்தர வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் மீதான வழக்குகளில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ள உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள. அமைச்சர் வளர்மதி, லஞ்ச ஒழிப்பு துறை அக்டோபர் 12ம் தேதிக்குள் பதில் தருமாறு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை வேறு ஒருவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது 2012ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

இதேபோல 2001- 06ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், 2012ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எடுத்துள்ளார். இந்த இரு வழக்குகளும் இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணை வந்தது. அப்போது நீதிபதி, ‘லஞ்ச ஒழிப்புத் துறையின் நடைமுறை மோசமாக உள்ளது. ஒவ்வொரு வழக்கிலும் இதே நடைமுறைகள் பின்பற்றப்படுவது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்கில் 100க்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரித்து ஏராளமான ஆவணங்களை ஆய்வு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் மேல்விசாரணை கோரி தாக்கல் செய்த மனு அடிப்படையில் விசாரணை நடத்திய அதே புலன் விசாரணை அதிகாரி வழக்கை முடித்து வைக்க கூறி இருக்கிறார்.

இந்த வழக்குகளை எதிர்கொள்ள யாரும் விரும்பவில்லை. அமைச்சர் ஐ.பெரியசாமி எதிரான வழக்கை பொறுத்தவரை விடுவிக்க கோரிய மனுவும், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவும் உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், வழக்கு தொடர அனுமதி வழங்கிய விவகாரத்தின் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்து இருக்கிறது. கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகளை பார்க்கும்போது நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும். இந்த வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதால் தன்னை வில்லனாக பார்க்கிறார்கள். தனிப்பட்ட முறையில் இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுக்கவில்லை’ என்றார். இந்த இரண்டு வழக்குகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமைச்சர் ஐ பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 12ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

 

The post சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையை எதிர்த்து உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரணை; அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி பதில்தர வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : High Court ,Minister I. Periyasamy ,minister ,Varamathi ,Chennai High Court ,Chennai ,I. Periyasamy ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?