×

சோழிங்கநல்லூரில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1860 கோடி மதிப்பிலான 62.17 ஏக்கர் அரசு நிலம் மீட்பு

துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூரில் கடந்த 35 ஆண்டுகளாக தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1860 கோடி மதிப்பிலான 62.17 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் நீதிமன்ற உத்தரவின்பேரில் மீட்கப்பட்டன. அங்கிருந்த அனைத்து கட்டிடங்களும் இடித்து அகற்றப்பட்டன. சென்னை ராஜீவ்காந்தி சாலையில் இருந்து செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புக்கு செல்லும் பிரதான சாலையில் சோழிங்கநல்லூர் கிராமம், புலன் எண்.574 வகைப்பாட்டில் 62.17 ஏக்கர் அரசு புறம்போக்கு தரிசு நிலம் உள்ளது. இந்நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.1860 கோடி. இந்த நிலம் கடந்த 35 ஆண்டுகளாக ஒரு தனிநபர் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்தது. அங்கு கடைகள், வீடுகள் கட்டப்பட்டு மக்கள் குடியிருந்து வந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்ததும் வருவாய்துறை அதிகாரிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின்போது, அனைத்து ஆவணங்களும் அவை முறையாக அரசு புறம்போக்கு தரிசு நிலம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

இதனால் அந்த அரசு புறம்போக்கு நிலத்தை உடனடியாக தனிநபர் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அந்த ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்தவர்களை வெளியேறும்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் சிவகுமார் தலைமையில் வருவாய்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில், சோழிங்கநல்லூரில் ரூ.1860 கோடி மதிப்பிலான 62.17 ஏக்கர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்றிரவு தென்சென்னை கோட்டாட்சியர் அருள்ஆனந்தன், சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் சிவகுமார் உள்பட வருவாய்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடு, கடை உள்பட அனைத்து கட்டிடங்களையும் இடித்து அகற்றி, அரசுக்கு சொந்தமான 62.17 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியதால் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

 

The post சோழிங்கநல்லூரில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1860 கோடி மதிப்பிலான 62.17 ஏக்கர் அரசு நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Sozhinganallur ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…