
டெல்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்தியா – பாகிஸ்தான் போட்டியின்போது மழை பெய்தால் மாற்று நாளில் ஆட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் 4 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 30ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் முடிவடைந்து அடுத்தபடியாக சூப்பர் 4 போட்டிகள் நடத்தப்படவிருக்கின்றன. தலா 2 அணிகள் சூப்பர் 4 போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
இந்த 4 அணிகளும் ஒவ்வொரு அணிக்கு எதிராக ஒவ்வொரு போட்டிகள் விளையாடவுள்ளனர். இந்தியா – பாகிஸ்தான் அணிகள் வருகின்ற 10ம் தேதி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இப்போட்டி கொழும்பில் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாளை மறுநாள் இலங்கையில் மழை வருவதற்கு வாய்ப்பு இருப்பதன் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல் நாளில் போட்டியின்போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் மாற்று நாளில் (ரிசர்வ் டே) ஆட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற அணிகள் மோதும் ஆட்டங்களுக்கு ரிசர்வ் டே இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. கிரிக்கெட் போட்டியில் ரிசர்வ் டே என்பது வழக்கமாக இறுதிப்போட்டிக்கு மட்டுமே வழங்கப்படும். இது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழையால் ரத்தானது குறிப்பிடத்தக்கது.
The post ஆசிய கோப்பை கிரிக்கெட் : இந்தியா – பாகிஸ்தான் போட்டியின்போது மழை பெய்தால் மாற்று நாளில் ஆட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு..!! appeared first on Dinakaran.