×

குறைந்த செலவில் அதிக லாபம் அவரை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

தோகைமலை : கரூர் மாவட்டம் கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் அவரை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அவரை சாகுபடியில் அதிக மகசூல் பெற்று லாபம் பெறுவது குறித்து முன்னோடி விவசாயிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.அவரை சாகுபடி செய்வதற்கு ஆடி, ஆவணி ஆகிய மதங்களில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற பருவம் ஆகும். மேலும் மலை பகுதியில் அவரை சாகுபடி செய்வதற்கு சித்திரை மாதம் சிறந்தது ஆகும். இதேபோல் செடி அவரையை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம்.

அவரை சாகுபடியில் பட்டை அவரை, கோழி அவரை, பட்டை சிகப்பு, நெட்டு சிகப்பு, குட்டை அவரை போன்ற ரகங்கள் உள்ளது. இதில் பந்தல் முறையில் அவரை சாகுபடி செய்தால் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதையும், செடி அவரை சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதையும் தேவைப்படுகிறது.

விதைகளை நடுவதற்கு முன்பு ரைசோபியம் 200 கிராம், பாஸ்போபாக்டீரியா 200 கிராம், டிரைக்கோடெர்மா விரிடி 100 கிராம், சூடோமோனால் புளுரசன்ஸ் 100 கிராம் போன்றவற்றை ஆறிய அரிசி வடி கஞ்சியில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். பின்னர் 24 மணி நேரத்திற்குள விதைநேர்த்தி செய்யப்பட்ட அவரை விதையை நடவு செய்ய வேண்டும்.

அவரை சாகுபடியில் ஈடுபடும் போது மண் பரிசோதனைகள் செய்து அதற்கு ஏற்ப உரங்களை இடவேண்டும். இதுபோல் மண் பரிசோதனை செய்து உரம் இடுவதன் மூலம் தேவைக்கு அதிகமான உரம் இடுவதை தவிர்ப்பதோடு, செலவீனங்களை குறைக்கலாம். அவரை சாகுபடியில் 4 நாட்களுக்கு ஒரு முறை நீர்பாய்ச்ச வேண்டும். மேலும் காய் அறுவடைக்கு முதல் நாள் தண்ணீர்பாய்ச்சிய பின்பு காய்களை அறுவடை செய்ய வேண்டும். காய் அறுவடை செய்த பின்பு மறுநாளும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

அவரை சாகுபடியின் போது கொடி அவரைக்கு வரிசைக்கு வரிசை 10 அடியும், செடிக்கு செடி 2 அடியும் இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். இதேபோல் செடி அவரைக்கு பாத்திக்கு பாத்தி 3 அடியும், செடிக்கு செடி 1.50 அடியும் இடைவெளி விட்டு வதைகளை நடவு செய்ய வேண்டும். பந்தல் அவரை சாகுபடி செய்யும் போது நன்றாக மக்கிய தொழு உரம் ஒரு ஏக்கருக்கு 1 டன் என்ற அளவில் குழிக்கு 2 கிலோ வீதம் இட வேண்டும்.

அவரை சாகுபடியின் போது விதை நடவு செய்து 40 நாட்கள் கழிந்தவுடன் 2வது உரமாக மேல் உரம் பாக்டம்பாஸ் 50 கிலோ இட வேண்டும். செடி மிகவும் பச்சையாக இருந்தால் உரத்தின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். ஒரு ஏக்கருக்கு 2 கிலோ பயறுவகை நுண்ணூட்டத்தை தேவையான மணலுடன் கலந்து செடிக்கு செடி இட வேண்டும். அவரை சாகுபடியை செய்தால் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற்று விவசாயிகள் லாபம் பெறலாம் என்று முன்னோடி விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

The post குறைந்த செலவில் அதிக லாபம் அவரை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Doghimalai ,Kadavur ,Doghimalai Union ,Karur District ,Dinakaran ,
× RELATED கத்தரிக்காய் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வழிமுறை