×

தமிழ்நாடு அரசு முயற்சியால் 38 நாட்களுக்கு பின் ஈராக்கில் உயிரிழந்த தொழிலாளி உடல் சொந்த ஊர் வந்தது

*நத்தம் மூங்கில்பட்டி மக்கள் சோகத்தில் மூழ்கினர்

நத்தம் : ஈராக்கில் உயிரிழந்த தொழிலாளி உடல் தமிழ்நாடு அரசு முயற்சியால் 38 நாட்களுக்கு பின் அவரது சொந்த ஊராான நத்தம் மூங்கில்பட்டிக்கு வந்தது.
நத்தம் அருகேயுள்ள மூங்கில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னையா (45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கோகிலா. இவர்களுக்கு 14, 11 வயதுகளில் இரு மகன்களும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

சின்னையா பிழைப்பிற்காக கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் ஈராக் நாட்டில் கம்பி கட்டும் வேலைக்காக சென்று அங்கு வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆக.1ம் தேதி சின்னையா தற்கொலை செய்து கொண்டதாக ஈராக் நாட்டிலிருந்து அவரது மனைவி கோகிலாவிற்கு தகவல் வந்தது. முன்னதாக சின்னையா அவரது மனைவி கோகிலாவிடம் ஈராக்கிலிருந்து தன் மனைவி மற்றும் உறவினர்களுக்கு அனுப்பியுள்ள செல்போன் வீடியோ பதிவில், தான் இறப்புக்கு காரணமானவர்கள் பெயர்களை குறிப்பிட்டு வேண்டுமென்றே திட்டமிட்டு வாட்ஸ் அப் மூலம் அவதூறான சில விஷயங்களை பரப்பி விட்டதாகவும், அதன் காரணமாக தன்னால் வாழ இயல முடியவில்லை’ என கூறியிருந்தார்.

இவ்வாறு தகவல் வந்ததையடுத்து ஈராக் நாட்டில் இருந்து தனது கணவர் சின்னையா உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் கோரிக்கை மனுவை கோகிலா அளித்திருந்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டு இந்திய தூதரகம் மூலம் உயிரிழந்து 38 நாட்கள் கழித்து சின்னையா உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு அங்கிருந்து அவரது சொந்த ஊரான நத்தம் அருகே மூங்கில்பட்டிக்கு நேற்று வந்தது.

பின்னர் நத்தம் வருவாய் துறை அதிகாரிகள் மூலம் சின்னையா உடல் அவரது மனைவி கோகிலாவிடம் ஒப்படைக்கப்பட்டது. சின்னையாவின் உடலை கண்டு குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. பிழைப்புக்காக வெளிநாடு சென்றவர் உயிரிழந்து பிணமாக வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post தமிழ்நாடு அரசு முயற்சியால் 38 நாட்களுக்கு பின் ஈராக்கில் உயிரிழந்த தொழிலாளி உடல் சொந்த ஊர் வந்தது appeared first on Dinakaran.

Tags : Iraq ,Tamil Nadu government ,Nattam ,
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்ல பொதுமக்கள்...