×

கண்ணமங்கலம் அருகே தபால் நிலையத்தில் பொதுமக்களின் சிறுசேமிப்பு பணம் கையாடல்

*முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

கண்ணமங்கலம் : கண்ணமங்கலம் அருகே பொது மக்களின் சிறுசேமிப்பு பணம் கையாடல் செய்ததாக கூறி அப்பகுதி பெண்கள் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே ஒண்ணுபுரம் கிராமத்தில் தலைமை துணை தபால் நிலையம் இயங்கி வருகிறது. இந்த தபால் நிலையத்தின் கிளை அம்மாபாளையம் கிராமத்தில் உள்ளது. இங்கு அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் பணத்தை சேமித்து வந்துள்ளனர்.

இதுவரை சுமார் ₹12 லட்சத்திற்கும் மேலாக சேமித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஒரு சிலர் தங்களது கணக்கில் இருந்து பணம் எடுக்க சென்றனர். அப்போது தபால் ஊழியர்கள் வாடிக்கையாளரின் கணக்கில் பணம் இல்லை என கூறியுள்ளனர்.இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பெண்கள் தலைமை தபால் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் அம்மாபாளையம் தபால் நிலையத்தில் பணிபுரியும் செங்கம் பகுதியை சேர்ந்த ராகினி என்பவரை பணியிட நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கையாடல் செய்த பணத்தை திருப்பி தபால் நிலையத்திற்கு செலுத்த உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் இதுவரையில் வாடிக்கையாளர்கள் கணக்கில் பணத்தை செலுத்தவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்ேபாது காவல் நிலையத்தில் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று கண்ணமங்கலம் காவல் நிலையத்திற்கு வந்து, தபால் நிலையத்தில் செலுத்திய பணத்தை மீட்டு தரும்படியும், பொதுமக்களின் சேமிப்பு பணத்தினை கையாடல் செய்த தபால் நிலைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post கண்ணமங்கலம் அருகே தபால் நிலையத்தில் பொதுமக்களின் சிறுசேமிப்பு பணம் கையாடல் appeared first on Dinakaran.

Tags : Postal Station ,Kannamangalam ,KANAMANGALE ,Kanamangalam ,Sangangalam ,
× RELATED ஆரணி அருகே அத்தியூர் மலையில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது..!!