
குளத்தூர் : குளத்தூர் அருகே காட்டுப்பகுதியில் காருடன் ஒருவர் தீயில் எரிந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வைப்பார் – பல்லாகுளம் இடையிலான காட்டுப்பகுதியில் தனியார் கருவாட்டு கம்பெனி எதிர்ப்புறம் கார் ஒன்று நேற்று மாலை 6 மணிக்கு எரிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் குளத்தூர், சூரங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால், அதற்குள் கார் முழுமையாக எரிந்து தீக்கிரையானது. அத்துடன் காரின் உள்ளே வாலிபர் ஒருவர் உடலும் எரிந்த நிலையில் கிடந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன், விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் ஆகியோர் விசாரணையை முடுக்கி விட்டனர். மேலும் நெல்லையில் இருந்து வந்த தடயவியல் நிபுணர் தனலட்சுமி, இறந்து கிடந்தவரின் உடலை ஆய்வு செய்தார். இதில் இறந்தவரின் உடலில் வெள்ளி அரைஞாண் கொடியும், கழுத்தில் தங்கச்சங்கிலியும் தீயில் கருகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. இறந்தது ஆண் என்பது உறுதியானது. தூத்துக்குடியில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய், அங்குமிங்கும் ஓடிய போதும் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
உடலை கைப்பற்றிய போலீசார், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் தீயில் கருகிய காரின் நம்பர் பிளேட்டில் டிஎன்64 எப்1587 என்பது தெரிந்தது. விசாரணையில் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த நாகஜோதி (48) என்பவருக்கு சொந்தமான கார் என்பதும் அவரை காருடன் காணவில்லை என குடும்பத்தினர் சாயல்குடி போலீசில் புகார் அளித்திருப்பதும் தெரியவந்தது.
காரில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தது யார்? அவரை மர்ம நபர்கள் யாரும் கடத்தி வந்து எரித்துக் கொன்றனரா அல்லது அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post தூத்துக்குடி அருகே காட்டுப்பகுதியில் பயங்கரம் காரில் கடத்தி வந்து வாலிபர் எரித்து கொலை? appeared first on Dinakaran.