×

சென்னை ராணிமேரி கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை ராணிமேரி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சாலை விபத்தில் சிக்கியவர்களை விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்து மீட்கும் பணிக்கான வீரா வாகனத்தின் பயன்பாட்டையும் சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தேசிய கீதத்தை இயற்றிய கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் நினைவை போற்றும் வகையில் சென்னை ராணிமேரி கல்லூரியில் அவருக்கான முழு திருவுருவ சிலையானது தமிழ் வளர்ச்சி மற்றும் நினைவகங்கள் துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 7 அடி உயரம் கொண்ட சிலையானது 29.7 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். தொடர்ந்து சென்னை தலைமை செயலகம் திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலக வளாகத்தில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை விபத்தில் சிக்கியவர்களை விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்து மீட்டெடுக்கும் பணிக்கான “வீரா” என்ற மீட்பு வாகனத்தின் பயன்பாட்டினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வாகனத்தின் பயன்பாட்டினை துவங்கி வைத்த பிறகு வாகனத்தின் செயல்பாடுகள் குறித்து தீயணைப்புத்துறையினரின் விளக்கத்தை பார்வையிட்டார். அதன் பிறகு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் சார்பில் புதுக்கோட்டை, ராணிப்பேட்டை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 7 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 சேமிப்பு கிடங்குகளை திறந்து வைத்து திருப்பூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் 6 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 கிடங்குகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

மேலும் நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணியின் போது மறைந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணைகளையும் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் வழங்கினார்.

The post சென்னை ராணிமேரி கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Rabindranath Tagore ,Rani Mary College ,Chennai ,Chennai. ,Ranimeri College ,
× RELATED இலக்கிய துறையில் சிறப்பான தொண்டு...