×

பழநி பகுதியில் திடீர் மழை எதிரொலி மானாவாரி நிலங்களில் தீவனங்கள் வளர்க்க ஆர்வம்

பழநி, செப். 8: பழநி பகுதியில் திடீர் மழையின் எதிரொலியாக மானாவாரி நிலங்களில் தீவன புற்கள் வளர்க்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டவை. அதுபோல் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தியும் அதிகளவு நடைபெறுகின்றன. பால் உற்பத்திற்கும், கால்நடைகள் வளர்ப்பிற்கும் பசுந்தீவனங்கள் இன்றியமையாதவை. மானாவாரி விவசாயிகளே கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தியில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இவர்கள் பருவமழை காலங்களில் தற்போது பசுந்தீவன வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பழநி பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. பழநி அருகே தும்பலப்பட்டி, புளியம்பட்டி, தொப்பம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மானாவாரி நிலங்களில் பசுந்தீவனங்கள் அதிகளவு வளர்க்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது:
பசுந்தீவனங்களை புல் வகை, தானியம், பயிறு, மரவகைகள் என வகைப்படுத்தலாம். இதன்படி இறவையாக கம்பு, நேப்பியர் ஒட்டுப்புல், கினியாப்புல் ஆகியவையும், மானாவாரியாக கொழுக்கட்டைப்புல், தீனாநாத் ஆகியவையும் புல் வகையாக சாகுபடி செய்யலாம். தானிய வகை தீவினங்களில் இறவையாகவும், மானாவாரியாகவும் தீவன மக்காச்சோளம், தீவனச்சோளம், தீவன கம்பு போன்றவை விதைப்பு செய்யலாம். பயிறு வகை தீவனமாக கிணற்று பாசனத்திற்கு வேலிமசால், குதிரைமசால், தட்டைப்பயிறு, கொத்தவரை, சோயாமொச்சை, மானாவாரியாக வேலி மசால், முயல் மசால், டெஸ்மோடியம், சிராட்ரோ, சங்கு புஷ்பமும் பயிரிடலாம். இந்த முறை விவசாயிகள் அதிகளவில் பசுந்தீவினங்கள் பயிரிட்டுள்ளதால் தீவனப்பற்றாக்குறை இருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு கூறினர்.

The post பழநி பகுதியில் திடீர் மழை எதிரொலி மானாவாரி நிலங்களில் தீவனங்கள் வளர்க்க ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Palani ,Dinakaran ,
× RELATED பழநி நகர் பகுதியில் சாலையோரம்...