×

50 லட்சத்தில் தேர் நிலைகள் புதுப்பிப்பு ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ரயில் மறியல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 1017 பேர் கைது

தஞ்சாவூர், செப்.8: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து 16 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் 34 பெண்கள் உள்பட 1017 பேர் கைது செய்யப்பட்டனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கத்தவறியது, தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மறுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தஞ்சாவூரில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், மாநகர செயலாளர் வடிவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த போராட்டத்தில் ஏராளமானோர் திரண்டு ரயிலை மறிப்பதற்காக மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். ஆனால் அவர்களை ரயில் நிலையத்துக்குள் செல்ல விடாமல் போலீசார் பேரிகார்டுகள் கொண்டு தடுப்புகள் அமைத்தனர். அப்போது கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த நேரத்தில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மாற்று வழியாக ரயில் நிலையத்துக்குள் நுழைந்தனர். பின்னர் தண்டவாளத்தில் அமர்ந்து ஒன்றி அரசை கண்டித்து கோஷமிட்டனர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

சிலர் பேரிக்கார்டை தகர்த்து ரயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களையும் போலீசார் அப்புறப்படுத்தினர். ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அம்மாபேட்டை தலைமை அஞ்சலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நம்பிராஜன் முனியாண்டி மயில்வாகனன் கோபால் ராஜேந்திரன் சரவணன் சேகர் நகர செயலாளர் ரவி கலந்து கொண்டு அஞ்சலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் இதில் 20 பெண்கள் உட்பட 62பேர் கைது செய்யப்பட்டனர்.

ஒரத்தநாடு: ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஒரத்தநாடு போஸ்ட் ஆபீஸ் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் மறியலில் ஈடுபட்ட நிர்வாகிகளை ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசார் கைது செய்தனர். பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் தரையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர் நீலமேகம் தலைமையில் 8 பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

திருவையாறு: திருவையாறில் ஸ்டேட் வங்கி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் முற்றுகை போராட்டம் ஒன்றிய செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் 35பேரை போலீசார் கைது செய்தனர். திருக்காட்டுப்பள்ளி: பூதலூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி தலைமையில் 150 பேர் கைது செய்யப்பட்டனர். கும்பகோணம்: கும்பகோணத்தில் ரயில் மறியல் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமை வகித்தார். இரண்டு பெண்கள் உட்பட 65 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்

பேராவூரணி: பேராவூரணியில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

The post 50 லட்சத்தில் தேர் நிலைகள் புதுப்பிப்பு ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ரயில் மறியல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 1017 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Marxist-Communist Party ,Union BJP government ,Thanjavur ,Marxist-Communist ,Marxist Communist Party ,Dinakaran ,
× RELATED ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்க மார்க்சிஸ்ட் எதிர்ப்பு