×

30 ஆண்டுக்கு பிறகு கோயிலுக்கு சென்ற பட்டியல் இன மக்கள்: பதற்றம் நிலவுவதால் போலீஸ் குவிப்பு

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றியம் பேளுக்குறிச்சியில் உள்ள மாரியம்மன் கோயிலை குறிப்பிட்ட சமூகத்தினர், தங்களுக்குத் தான் சொந்தம் என்றும், பட்டியலின மக்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறியதால், இரு தரப்பினர் இடையே கடந்த 30 ஆண்டு காலமாக பிரச்னை இருந்து வந்தது.

இதுதொடர்பாக, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு ஏற்படவில்லை. இரு தரப்பினரும் கோர்ட்டில் வழக்கு தொடுத்த நிலையில், கடந்த 30 ஆண்டுகளாக கோயில் திருவிழா நடத்தப்படவில்லை. இதனையடுத்து, அதிகாரிகள் கோயிலை பூட்டி சீல் வைத்தனர். பூசாரி மட்டும் பூஜை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த மாதம் கோர்ட் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்ததாகவும், அதில் பட்டியலின மக்கள், கோயிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கியதாகவும் தகவல் பரவியது. இதனை தொடர்ந்து, நேற்று காலை, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர், கோயிலில் சாமி தரிசனம் செய்ய தயாராகினர். தகவல் அறிந்த பேளுக்குறிச்சி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் கோயில் வளாகத்தில் திரண்டனர். அசம்பாவிதம் ஏற்படாத வகையில், 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சாமி தரிசனம் செய்ய வந்தவர்களை, வருவாய்த்துறையினர், போலீசார் மூப்பனார் கோயில் அருகே நிறுத்தி, சமரச பேச்சுவார்த்தை நடத்தி 9 பேர் மட்டும் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்யும்படி அனுமதி வழங்கினர்.
இதனை ெதாடர்ந்து, கோயில் திறக்கப்பட்டு அப்பகுதி பெண்கள், ஆண்கள் 9 பேர் உள்ளே சென்று தேங்காய், பழம், கற்பூரத்தை அம்மனுக்கு படைத்து பூஜை செய்தனர். தொடர்ந்து, அப்பகுதி மக்கள் வழிபாடு நடத்தினர்.

The post 30 ஆண்டுக்கு பிறகு கோயிலுக்கு சென்ற பட்டியல் இன மக்கள்: பதற்றம் நிலவுவதால் போலீஸ் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Mariamman temple ,Belukurichi, Namakkal district ,
× RELATED பாக்கு தோட்டங்களில் மருந்து தெளிப்பு