×

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடிகால் பணியை குறித்த காலத்தில் முடிக்காதவர்களின் ஒப்பந்தம் ரத்து: ஆய்வு கூட்டத்தில் ஆணையர் எச்சரிக்கை

சென்னை, செப்.8: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை குறித்த காலத்துக்குள், தரமாக முடிக்காதவர்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும், என்று ஆய்வு கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடனான ஆய்வுக்கூட்டம் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

ஆய்வு கூட்டத்துக்கு, மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து பேசியதாவது: சென்னை மாநகராட்சி சார்பில் 2624 கி.மீ. நீளத்தில் 1516 மழைநீர் வடிகால்கள் மற்றும் 53.42 கி.மீ. நீளத்தில் 33 கால்வாய்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, இந்த மழைநீர் வடிகால்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள ஆகாயத்தாமரைகள், வண்டல்கள் மற்றும் குப்பைக் கழிவுகளை அவ்வப்போது அகற்றி மழைநீர் எளிதில் செல்லும் வகையில் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இதை தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1991.07 கோடி மதிப்பில் 786.13 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில் 500 கி.மீ. நீளத்திற்கும், உலக வங்கி நிதியின் கீழ் 38.97 கி.மீ. நீளத்திற்கும், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 58 கி.மீ. நீளத்திற்கும், வெள்ளத் தடுப்பு நிவாரண நிதியின் கீழ் 104 கி.மீ. நிளத்திற்கும் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.

வெள்ளத் தடுப்பு மேலாண்மைக் குழுவின் பரிந்துரையின்படி, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளும், விடுபட்ட இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்ட காரணத்தினால் கடந்த ஜூன் மாதம் முதல் அவ்வப்போது தொடர்ந்து பெய்து வரும் மழையில் சுரங்கப்பாதைகள் மற்றும் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கவில்லை. மேலும், விரிவாக்கம் செய்யப்பட்ட பெருங்குடி, மடிப்பாக்கம், ராம் நகர், குபேரன் நகர், மணப்பாக்கம், முகலிவாக்கம், ராமாபுரம், வளசரவாக்கம், அம்பத்தூர், மணலி உள்ளிட்ட இடங்களில் சென்னை குடிநீர் வாரியம், மின்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் மற்றும் சாலைப் பணிகளை சம்பந்தப்பட்ட துறைகளின் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

மேலும், வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்திட வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தடுப்புகள் அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காத ஒப்பந்ததாரர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். மழைநீர் வடிகால் பணிகளை குறித்த காலத்திற்குள் தரமாகவும், விரைந்தும் முடித்திட வேண்டும். பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்காமல் காலதாமதம் செய்யும் ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், மாநகராட்சி இணை ஆணையர் ஜி.எஸ்.சமீரன், தலைமைப் பொறியாளர் (பொது) எஸ்.ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடிகால் பணியை குறித்த காலத்தில் முடிக்காதவர்களின் ஒப்பந்தம் ரத்து: ஆய்வு கூட்டத்தில் ஆணையர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Chennai ,Chennai Municipal Corporation ,Dinakaran ,
× RELATED தேங்கிய மழை நீரை உடனுக்குடன் அகற்றிய...