×

ஆர்.கே.நகர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பழகுநர் ஆள் சேர்க்கை முகாம்: சென்னை கலெக்டர் தகவல்

சென்னை, செப். 8: ஆர்.கே.நகர் தொழிற் பயிற்சி நிலையத்தில், வருகிற 11ம் தேதி தேசிய தொழிற்பழகுநர் ஆள் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளதாக சென்னை கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் மு.அருணா வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் இந்திய அரசின் தென் மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு இயக்ககம் இணைந்து ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மாவட்ட அளவிலான தேசிய தொழிற்பழகுநர் பயிற்சிமுகாம் நடைபெற உள்ளது. பல்வேறு தொழிற்பிரிவுகளை சேர்ந்த பயிற்சியாளர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி வழங்குவதற்காக, மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் முகாம் (PM National Apprenticeship Mela-2023) வருகிற 11ம் தேதி காலை 9 மணியளவில் வடசென்னை ஆர்.கே.நகர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் (வ சென்னை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில்) நடைபெற உள்ளது.

இதில் அரசு மற்றும் தனியார் தொழிற் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற் பழகுநர் பயிற்சி வழங்க ஐ.டி.ஐ. படித்து தேர்ச்சிபெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் 8, 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை தொழிற்பழகுநராக தேர்வு செய்ய உள்ளனர். தற்போது தொழிற்பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக குறைந்தபட்சம் ரூ,8000 மற்றும் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும். இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி (என்ஏசி) முடிக்காத அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் www.apprenticeshipindia.gov.in இணையதள முகவரியில் பதிவு செய்து அசல் கல்வி சான்றிதழ்களுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஆர்.கே.நகர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பழகுநர் ஆள் சேர்க்கை முகாம்: சென்னை கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : National Vocational Recruitment Camp ,RK Nagar Vocational Training Centre ,Chennai ,RK Nagar ,Vocational Training Center ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?