×

செங்கை ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாவட்ட போலீஸ் எஸ்பி ஆய்வு

செங்கல்பட்டு, செப். 8: செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையமும், ரயில் நிலையமும் மிக அருகருகே உள்ளது. காலையில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்க்கு வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் என, பெரும்பாலானோர் ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், காலையிலும் மாலையிலும் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், போக்குவரத்து நெரிசலை குறைக்க செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனீத் ரயில்வே அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்லவும், அதேபோல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்ல ஒரே பாதை மட்டுமே உள்ளது.

குறுகிய நிலையில் சாலை இருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. எனவே, செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் ரயில் நிலையம் வழியாக அனுப்பி போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும், செங்கல்பட்டு ரயில் நிலைய முகப்பு பகுதியை முழுவதுமாக புனரமைப்பு செய்ய முடிவு செய்துள்ளனர். செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மொத்தம் எட்டு நடைமேடைகள் உள்ளது இதில் 5, 6, 7, 8 ஆகிய நான்கு நடைமேடைகளை புதுப்பிக்க இருப்தாகவும் தெரிவித்தனர்.

தற்போது, ரயில் நிலையத்தை சுற்றி பாதுகாப்பின்றி ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் நிற்கின்றன. சிசிடிவி கேமரா முறையாக செயல்படாததால் தினமும் இருசக்கர வாகன திருட்டு சம்பவம் நடைபெற்று வருகின்றது. இந்த குற்ற சம்பவங்களை தவிர்க்க செங்கல்பட்டு ரயில் நிலைய வளாகத்தில் மல்டி லெவல் கார், இருசக்கர வாகனங்களை நிறத்த பார்க்கிங் வசதி ஏற்படுத்த உள்ளனர். அதேபோல், வாரத்தில் முதல் நாள் மற்றும் விழா காலங்களில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி செல்ல வேண்டி நிலை உருவாகும். தற்போது ரயில் நிலையத்தில் குறைந்த டிக்கெட் கவுன்டர்கள் மட்டுமே உள்ளது. இந்த டிக்கெட் கவுன்டரை எதிரே மாற்றி ரயில் நிலையம் வளாகத்தில் அமைத்து ஆறு கவுன்டர்களை திறக்க இருப்தாக தெரிவித்தனர். மேலும், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தையும், ரயில் நிலையத்தையும் இணைக்க புதிய வழி உருவாக்கப்படவுள்ளது. 10 அடி அகலத்தில் நடைபாதை அமைத்து பயணிகள் பயன்டுத்த உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

தற்போது உள்ள ரயில் நிலைய அலுவலக கட்டிடம் பழமை வாய்ந்து இருப்பதால், அதை அகற்றிவிட்டு புதிதாக தரை தளம், முதல் தளத்துடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்படவுள்ளது. ரயில் நிலையம் சுற்றிலும் புதிய சாலைகள் அமைக்கப்படவுள்ளது. ரயில்வே குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க முடிவு செய்துள்ளனர். தற்போது ரயில்வே குடியிருப்புகளில் உள்ளவர்களை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பலர் காலி செய்ய சம்மதம் தெரிவித்துள்ளனர். சிலர் காலி செய்ய மறுத்துள்ளனர். அவர்களை ரயில்வே போலீசார் உதவியுடன் காலி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மணிகூண்டு, புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம், இராட்டிணங்கிணறு, அரசு மருத்துவமனை வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் மூன்று மாதங்களில் இந்த பணிகள் அனைத்து முழுமையாக நிறைவுபெற்று மக்கள் பயன்பாட்டிற்க்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ரயில்வே பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. எனவே எப்போது ரயில்வே பணிகள் முழுமையாக நிறைவுபெற்று மக்கள் பயன்பாட்டிற்க்கு வரும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு டிஎஸ்பி பாரத், செங்கல்பட்டு நகர காவல் நிலைய ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், தனிப்பிரிவு ஆய்வாளர் அலெக்சாண்டர், செங்கல்பட்டு நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜா, போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரவி, தனிப்பிரிவு காவலர் ஜெகன் மற்றும் ரயில்வே அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post செங்கை ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாவட்ட போலீஸ் எஸ்பி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Sengai railway station ,District Police SP ,Chengalpattu ,Stand ,Station ,Dinakaran ,
× RELATED தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி...