×

வனவிலங்குகள், சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணிக்க டிராப் கேமராக்கள் வருகை வனத்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி வேலூர் மாவட்டத்தில் வனப்பகுதிகளில்

வேலூர், செப்.8: வேலூர் மாவட்டத்தில் வனப்பகுதிகளில் வனவிலங்குகள், சட்டவிரோத நடவடிக்கைளை கண்காணிக்கும் வகையில் டிராப் கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக வனத்துறை 22 ஆயிரத்து 877 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இதை பாதுகாக்க பல்வேறு இடங்களில் மாவட்ட வன அலுவலகங்கள் செயல்படுகின்றன. மேலும் வனவிலங்குகள் வேட்டையை தடுக்கவும், மரங்களை வெட்டி கடத்துவதை தடுக்கவும், சசட்ட விரோத நடவடிக்கைளை தடுக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. இதில் வேலூர் வனக்கோட்டத்தில் 1 லட்சத்து 272.220 ஹெக்டேர் பரப்பளவில் வனப்பகுதி உள்ளது.

இதில் 99,736.415 ஹெக்டேர் பரப்பளவில் காப்புக் காடுகள் உள்ளன. 535.805 ஹெக்டேர் பரப்பளவில் நிலப்பரப்பு உள்ளது. வேலூர், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, ஒடுக்கத்தூர், அமிர்தி ஆகிய வனச் சரகங்களும் உள்ளன. அமிர்தி வன விலங்கு சரணாலயம் வேலூர் மாவட்டத்தில் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் ஜவ்வாதுமலை தொடர்ச்சியாக உள்ளதால் வனவிலங்குகள், சந்தனமரங்கள், செம்மரங்கள் உள்ளது. இவற்றை பாதுக்கும் பணியில் வனத்துறை ஊழியர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

இதற்கிடையில் வனவிலங்குகள் ஊருக்குள் சென்று மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வனவிலங்குகளை விரட்டியடிக்கும் பணி வனத்துறை ஊழியர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இருந்தாலும், இரவு நேரங்களில் சுற்றித்திரியும் ஆட்களின் நடமாட்டத்தையோ அல்லது புதிய வகை வன உயிரினங்களையோ கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது. இதைப் போக்கும் விதமாக ஒவ்வொரு வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் முக்கியமான இடங்களில் வன உயிரினங்களின் நடமாட்டத்தை கண்காணிக்க ‘டிராப் கேமரா’ பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் மாவட்டம் தமிழக- ஆந்திரா எல்லையில் அமைந்துள்ளது. மேலும் எல்லைபகுதிகள் இருமாநிலங்களுக்கும் வனப்பகுதியாக அமைந்துள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் இருந்து வனவிலங்குகள் தமிழகத்திற்கு வந்துவிடுகிறது. இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் கண்காணிக்க டிராப் கேமரா பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வேலூர் மாவட்டத்திற்கு 2 டிராப் கேமராக்கள் வந்துள்ளது. இந்த கேமராக்கள் குடியாத்தம், பேர்ணாம்பட்டு வனச்சரக்கத்திற்கு வழங்கப்பட உள்ளது. இந்த கேமராவை வனங்களில் எந்த இடத்தில் எப்படி பொருத்தி கையாள்வது? பராமரிப்பது எப்படி? என்பதற்கான சிறப்பு பயிற்சி வனத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த டிராப் கேமராவால் அரிய வகை உயிரினங்களின் நடமாட்டம் கண்டறிய வாய்ப்பு ஏற்படும். விலங்குகளின் நடமாட்டம் மற்றும் வேட்டையாடுதல் அல்லது மரம் வெட்டுதல் போன்ற எந்த நிகழ்வுகளையும் கண்காணிக்க டிராப் கேமராக்கள் உதவும். டிராப் கேமரா என்பது மோஷன் சென்சார் அல்லது அகச்சிவப்பு சென்சார் பொருத்தப்பட்ட ரிமோட் ஆக்டிவேட் செய்யப்பட்ட கேமரா ஆகும். இது காட்டு விலங்குகளை தானாக படம் பிடிக்கும். அதன் அடிப்படையில் விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும். இதுமட்டுமின்றி சட்ட விரோதமாக வனப்பகுதியில் ஈடுபடுவர்களின் நடமாட்டம் அறிய முடியும். வனப்பகுதிகளில் புகுந்து வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பல் குறித்த விவரங்களும் கிடைத்துவிடும். அதேபோல் வேலூர் மாவட்ட எல்லைபகுதிகளுக்கு ஆந்திராவில் இருந்து வரும் யானைகள் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்த கேமரா மூலம் யானைகள் நடமாட்டத்தையும் கண்காணிக்க முடியும். இதற்கு இந்த டிராப் கேமரா வனத்துறை ஊழியர்களுக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post வனவிலங்குகள், சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணிக்க டிராப் கேமராக்கள் வருகை வனத்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி வேலூர் மாவட்டத்தில் வனப்பகுதிகளில் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Vellore district ,
× RELATED 9 மையங்களில் நீட் தேர்வை 5,266 மாணவர்கள்...