×

இளையோர் தடகள போட்டியில் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு கலெக்டர் தொடங்கி வைத்தார் திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான

திருவண்ணாமலை, செப்.8: திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டி நேற்று நடந்தது. அதனை, கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார். அதில், 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டி நேற்று நடந்தது. அதில், 14 வயது முதல் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். அதில், 14 வயது, 16 வயது, 18 வயது மற்றும் 20 வயது என்ற பிரிவுகளில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 100 மீட்டர் முதல் 5 ஆயிரம் மீட்டர் வரையிலான ஓட்டம், வட்டு ஏறிதல், குண்டு ஏறிதல், நீளம் தாண்டுதல், ஈட்டி ஏறிதல், மும்முனை தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. இந்நிலையில், மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டிகளின் தொடக்க விழாவுக்கு, மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன், விளையாட்டு விடுதி மேலாளர் சண்முகபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தடகளச்சங்க செயலாளர் புகழேந்தி வரவேற்றார்.

நிகழ்ச்சியில், தடகள போட்டிகளை ஒலிம்பிக் ேஜாதி ஏற்றி கலெக்டர் பா.முருகேஷ் தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: மாவட்ட அளவிலான தடகள போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள், வரும் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். மேலும், கடந்த ஆண்டு மாநில அளவிலான போட்டிகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக நடந்தது. தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு உயர்கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. குறிப்பாக, அண்ணா பொறியியல் கல்லூரிகளில் சுமார் 500 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுதோறும் ஒதுக்கப்படுகிறது. காவல்துறையில் 5 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. எனவே, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் செலுத்தி, தங்களது உடல் வலிமையையும், அறிவுத்திறனையும் மேற்படுத்திக்கொள்ள வேண்டும். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று, நமது நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முடிவில் மாவட்ட தடகளச்சங்க பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு நேற்று மாலை நடந்த விழாவில், மாநில தடகளச்சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் பரிசுகள் வழங்கினார். அதில், மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post இளையோர் தடகள போட்டியில் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு கலெக்டர் தொடங்கி வைத்தார் திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான appeared first on Dinakaran.

Tags : Collector ,Tiruvannamalai ,Thiruvannamalai ,Murugesh ,
× RELATED ‘என் கல்லூரி கனவு’ உயர்கல்விக்கான...