×

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை: விவசாயிகளுக்கு இழப்பீடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

சென்னை: டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர், அதிகாரிகளுடன் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு நிவாரணம் வழங்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கபட்டாலும், போதுமான அளவு தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். கடைமடை வரை தேவையான தண்ணீர் சென்றடையாததால் குறுவை சாகுபடிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காவிரியில் இருந்து போதிய தண்ணீர் வராததால் பாசன நீர் கிடைக்காமல் பல இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகியுள்ளன. எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மறு விவசாயம் செய்யவும் சம்பா சாகுபடிக்கு தயாராகும் வகையில் சம்பா தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும். உரிய கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களுக்கான இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் உற்பத்தி ஆணையர் சி.சமயமூர்த்தி, திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் துறை ஆணையர் எல்.சுப்பிரமணியன், மயிலாடுதுறை மாவட்டத்தில் சர்க்கரை துறை கூடுதல்ஆணையர் த.அன்பழகன், நாகை மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குநர் எஸ்.நடராஜன் ஆகியோர் குறுவை பயிர்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். ஆய்வின் போது, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், வேளாண்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு தொடரபாக ஆய்வு செய்த அதிகாரிகள் அறிக்கையாக தயாரித்து அரசிடம் தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் குறுவை சாகுபடி பாதிப்பு குறித்து கள ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்.கே.பன்னீர் செல்வம், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வேளாண்துறை செயலாளர் சமயமூர்த்தி, வேளாண்துறை கமிஷனர் சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வில் தண்ணீரின்றி கருகிய குறுவை சாகுபடி, விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, ஏக்கருக்கு வழங்க வேண்டிய நிவாரண தொகை, டெல்டா மாவட்டங்களில் ஆய்வுகளை தீவிரப்படுத்துவது குறித்தும் முக்கிய முடிகள் எடுக்கப்பட்டு நிவாரணம் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு நெற்பயிர்களுக்கான இழப்பீடு எவ்வளவு என்பதை விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை: விவசாயிகளுக்கு இழப்பீடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Delta ,Kurvai ,Dinakaran ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...