×

அண்ணனை கொலை செய்தவர் பழிக்குப்பழி கொலை தம்பி உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுள்: கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சென்னை கோயம்பேடு மேட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் என்ற அமலாபால் (20). இவரது அண்ணனை கொலை செய்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (17) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் விக்னேஷ் ஜாமீன் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் தனது அண்ணனை கொலை செய்த விக்னேஷை பழிக்குப்பழி வாங்க திட்டம் போட்ட பிரகாஷ் தனது நண்பர்களுடன் விக்னேஷை நோட்டம் விட்டு வந்தார். கடந்த 2019 அக்டோபர் 25ம் தேதி வீட்டில் இருந்து கடைக்கு சென்ற விக்னேஷை, பிரகாஷ், அஜித் (23), மோகன் (25), சாரதி (23) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் சுற்றிவளைத்து கத்தியால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த விக்னேஷ் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய கோயம்பேடு போலீசார் பிரகாஷ் உள்ளிட்ட 5 பேரை கைது ெசய்து அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். இதில் சிறார் ஒருவர் ஒரு வருட சிறை தண்டனை பெற்று விடுதலையானார்.

மற்ற 4 பேர் மீதான வழக்கு விசாரணை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நீதிபதி லிங்கேஸ்வரன் முன்பு நடந்தது. போலீசார் தரப்பில் கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞர் கோவிந்தராஜ் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டதால் பிரகாஷ், அஜித், மோகன், சாரதி ஆகியோருக்கு ஆயுள்தண்டனையும், தலா ₹11 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

The post அண்ணனை கொலை செய்தவர் பழிக்குப்பழி கொலை தம்பி உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுள்: கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Prakash ,Amalapal ,Mettukulam ,Koyambedu, Chennai ,
× RELATED பெரியகுளம் அருகே நாட்டு வெடிகுண்டு,...