×

ரூ. 770 கோடி மானியத்துடன் ₹2,134 கோடி வங்கி கடனுதவி தமிழ்நாட்டில் 28,102 புதிய தொழில்முனைவோர் உருவாக்கம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: ரூ.770 கோடி மானியத்துடன் ₹2,134 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டு, 28,102 புதிய தொழில்முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கிண்டி சிட்கோ தலைமை அலுவலக கூட்ட அரங்கில் நேற்று தொழில் வணிக ஆணையரகத்தின் செயல்படுத்தப்படும் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: மாவட்ட தொழில் மையங்கள் மூலமாக படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டம், அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் ₹770 கோடியே மானியத்துடன், ரூ.2,134 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டு, 28,102 புதிய தொழில்முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர்.

நடப்பு ஆண்டு மாவட்ட தொழில் மைய அலுவலர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை அடைய வேண்டும். அதே வேளையில், மகளிர், மாற்றுத்திறனாளிகள், பட்டியலினத்தவர், பழங்குடியினர், சிறுபான்மையினர் பிரிவைச் சேர்ந்தவர்களும், தொழில்முனைவோராக உருவாக்கும் வகையில் பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். முதல்வரால் அறிவிக்கப்பட்ட அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தில் பொது மேலாளர்கள் தனி கவனம் செலுத்தி, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் அடித்தட்டு மக்களை தொழில்முனைவோர்களாக மாற்ற முழு முயற்சியுடன் பணிபுரிய வேண்டும்.

துறையால் செயல்படுத்தப்படும் முதலீட்டு மானியம், ஊதிய பட்டியல் மானியம், பின் முனை வட்டி மானியம் போன்ற 10 வகை மானியங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றினை குறித்த காலத்தில் எந்த காலதாமதமும் இன்றி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் அளிக்கும் வகையில் அவர்களையும் தொழில்முனைவோர்களாக மாற்றுவதற்கும், விவசாயிகளுக்கும், எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களுக்கும் ஒரு பாலமாக செயல்பட்டு இத்திட்டத்தை முழுமையான அளவில் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடையும் வகையில் செயல்படுத்திட வேண்டும். எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய மானியங்கள் மற்றும் கடனுதவிகளை உரிய நேரத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

The post ரூ. 770 கோடி மானியத்துடன் ₹2,134 கோடி வங்கி கடனுதவி தமிழ்நாட்டில் 28,102 புதிய தொழில்முனைவோர் உருவாக்கம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,T. Moe Andarasan ,Chennai ,Dinakaran ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...