×

2019 ஈஸ்டர் குண்டு வெடிப்பு கோத்தபயவை மீண்டும் அதிபராக்க செய்யப்பட்ட சதியா? சேனல் 4 ஆவணப்படத்துக்கு எதிர்ப்பு

கொழும்பு: இலங்கையில் 2019ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான சேனல் 4 ஆவணப்படத்துக்கு கோத்தபய ராஜபக்சே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த 2019 ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் தினத்தின்போது 3 கத்தோலிக்க தேவாலயங்கள், நட்சத்திர உணவு விடுதிகளில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் 11 இந்தியர்கள் உள்பட 270 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பிரிட்டனை சேர்ந்த சேனல் 4 அண்மையில் ஒரு ஆவணப்படத்தை வௌியிட்டது.

அதில் இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினர் மீண்டும் ஆட்சியில் அமர செய்யப்பட்ட சதியே குண்டு வெடிப்புக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ராஜபக்சேவின் விசுவாசியான மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி, உளவுத்துறையுடன் இணைந்து இந்த சதி திட்டத்தை அரங்கேற்றியதாகவும் அதில் இடம்பெற்றுள்ளது. ஆவணப்படத்தின் கூறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி மீண்டும் விசாரணை நடத்தப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் சேனல் 4 ஆவணப்படத்தின் கருத்துகளுக்கு கோத்தபய ராஜபக்சே மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஜபக்சே கூறியதாவது, “தன்னை அதிபராக்க இஸ்லாமிய தீவிரவாத குழுக்களுடன் சேர்ந்த சதி திட்டம் தீட்டியதாக கூறுவது பெரும் அபத்தம். இந்த குற்றச்சாட்டு ராஜபக்சேவின் பாரம்பரியத்தை சீர்குலைக்கும் முயற்சி. ராணுவ அதிகாரிகள் எப்போதும் அரசுகளுக்கு விசுவாசமாக இருப்பார்கள். ஆனால் தனி நபர்களுக்கு அல்ல. சேனல் 4ன் ஆவணப்படம் ஒரு கட்டுக்கதை” என்று தெரிவித்துள்ளார்.

The post 2019 ஈஸ்டர் குண்டு வெடிப்பு கோத்தபயவை மீண்டும் அதிபராக்க செய்யப்பட்ட சதியா? சேனல் 4 ஆவணப்படத்துக்கு எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : 2019 Easter ,Gotabaya ,Channel 4 ,Colombo ,Sri Lanka ,
× RELATED இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார...