
டோக்கியோ: இந்தியாவை தொடர்ந்து ஜப்பானும் நிலவை பற்றி ஆராய விண்கலத்தை அனுப்பியுள்ளது. ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனம் (ஜாக்ஸா) சார்பில் நிலவை ஆய்வு செய்வதற்கான பயண திட்டம் உருவாக்கப்பட்டது. இதற்காக ஸ்லிம் என்ற விண்கலத்தை ஜப்பான் தயாரித்தது. இந்நிலையில், ஜப்பானில் உள்ள தனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து எச் 2ஏ என்ற ராக்கெட் மூலம் ஸ்லிம் விண்கலம் நேற்று ஏவப்பட்டது. இந்த ஸ்மார்ட் லேண்டர் அடுத்தாண்டு தொடக்கத்தில் நிலவில் தரையிறங்க முயற்சிக்கும் என ஜாக்ஸா தெரிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆராய ரஷ்யாவின் லூனா 25, இந்தியா சார்பில் சந்திரயான் 3 விண்ணில் செலுத்தப்பட்டது. இதில்,லூனா 25 தோல்வியடைந்தது. சந்திரயான் 3 வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எச் 2ஏ ராக்கெட், எக்ஸ்ரே இமேஜிங் மற்றும் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மிஷன் அல்லது எக்ஸ்ஆர்ஐஎஸ்எம் எனப்படும் செயற்கை கோளையும் பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தியது. இது விண்மீன் திரள்களுக்கு இடையில் உள்ளவற்றின் வேகத்தையும் ஒப்பனையையும் அளவிடும். அந்த தகவல் வான் பொருள்கள் எவ்வாறு உருவானது என்பதை அறிய உதவுகிறது. மேலும் பிரபஞ்சம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்ற மர்மத்தை தீர்க்க வழிவகுக்கும் என ஜாக்ஸா தெரிவித்துள்ளது.
The post நிலவுக்கு விண்கலம் அனுப்பியது ஜப்பான் appeared first on Dinakaran.