×

டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஜி20 உச்சி மாநாடு நாளை தொடக்கம்: பைடன், ரிஷி சுனக், மேக்ரான் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

புதுடெல்லி: இந்தியா தலைமையில் ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நாளை தொடங்குகிறது. 2 நாள் நடக்கும் இம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உலக பொருளாதாரம் மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து விவாதிக்க, வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் இணைந்து ஜி20 அமைப்பை உருவாக்கின. இதில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 20 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி அடிப்படையில் உறுப்பு நாடுகள் ஏற்பது வழக்கம். அந்த வகையில், கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி இந்தோனேசியாவின் பாலியில் நடத்த ஜி20 உச்சி மாநாட்டில், 2023ம் ஆண்டிற்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டது.

இந்தியா தலைமையின் கீழ் கடந்த 9 மாதங்களாக நாடு முழுவதும் 60 நகரங்களில் சுமார் 200 ஜி20 கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, 18வது ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுதினம் நடக்க உள்ளது. இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாடு நடக்கும் பகுதிகள் புதுப்பொலிவாக்கப்பட்டுள்ளன. ஜி20 மாநாட்டிற்காக புதிதாக சீரமைக்கப்பட்ட டெல்லி பிரகதி மைதானத்தில் பல நவீன வசதிகளுடன் பாரத மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு தான் உச்சி மாநாட்டின் 2 நாள் கூட்டங்கள் நடக்க உள்ளன. மாநாட்டின் நிறைவாக உலக விவகாரங்கள் குறித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும்.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்கின்றனர். இவர்களில் பெரும்பாலான முக்கிய தலைவர்கள் இன்று டெல்லி வந்தடைகின்றனர். வாஷிங்டனில் இருந்து நேற்று புறப்பட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இரவு 6.55 மணி அளவில் டெல்லி வந்தடைவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, யுஏஇ, சீனா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இன்று வருகின்றனர். ஜெர்மனி பிரதமர் ஓல்ப் ஸ்கோல்ஸ் மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆகியோர் நாளை டெல்லி வருகின்றனர். இதன் காரணமாக டெல்லியில் இன்று முதல் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நகரின் பல்வேறு பகுதிகளிலும் 5,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணி நடக்கும். டெல்லியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க இன்று முதல் திங்கட்கிழமை வரை அனைத்து தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளனர்.
மேலும், உலக தலைவர்கள் தங்கி உள்ள ஓட்டல் மற்றும் மாநாடு நடக்கும் பகுதிகளில் அனைத்து ஆன்லைன் டெலிவரி சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆளில்லா விமானங்கள், பட்டங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் சுமார் 1.30 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜி20 மாநாட்டிற்காக டெல்லி நகரமே உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. ஜி20 மாநாட்டை ஒட்டி, உலக தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை இரவு விருந்தளிக்கிறார். இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

மோடி-பைடன் இன்று சந்திப்பு
ஜி20 மாநாட்டிற்காக டெல்லி வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடியுடன் இன்று இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். இதில் இருதரப்பு உறவு குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர். இதே போல, பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி நாளை மறுதினம் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார். இதுதவிர பல்வேறு தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.

புடின், ஜின்பிங் ஏன் வரவில்லை?
இந்தியாவில் நடக்கும் ஜி20 உச்சி மாநாட்டை சீனா அதிபர் ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புறக்கணித்துள்ளனர். இரு முக்கிய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்காதது இந்தியாவுக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இது குறித்து நேற்று பேட்டி அளித்த காங்கிரஸ் ஊடக துறை தலைவர் பவன் கேரா, ‘‘மிகுந்த பொருட்செலவில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் அனைத்து நாட்டு தலைவர்களையும் கலந்து கொள்ள வைத்து, இந்தியாவிற்கு பலன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது வெளியுறவு அமைச்சரின் பொறுப்பு. ஆனால், சீனா, ரஷ்யா ஆகிய இரு முக்கிய நாடுகளின் அதிபர்கள் மாநாட்டிற்கு வராதது நிறைய கேள்விகளை எழுப்புகிறது. இந்த கேள்விகளுக்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளிப்பார் என எதிர்பார்க்கிறோம்’’ என கூறி உள்ளார். இதற்கிடையே, ஜி20 அமைப்பில் நிரந்தர உறுப்பினராக ஆப்பிரிக்க கூட்டமைப்பை இணைக்கும் இந்தியாவின் முயற்சிக்கு முதல் நாடாக சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.

The post டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஜி20 உச்சி மாநாடு நாளை தொடக்கம்: பைடன், ரிஷி சுனக், மேக்ரான் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : High ,G20 Summit ,Delhi ,Biden ,Rishi Sunak ,Macron ,New Delhi ,India ,US ,President ,
× RELATED ஒவ்வொரு நாளும் முக்கியமானது ஜாமீன்...