
- ஜி-20 உச்சிமாநாடு
- சீனா
- ரஷ்யா
- இந்தியா
- வெளியுறவு அமைச்சர்
- ஜெய்ஷங்கர்
- புது தில்லி
- ஒன்றிய வெளியுறவு அமைச்சு
புதுடெல்லி: ஜி-20 உச்சி மாநாட்டில் சீனா, ரஷ்யா நாடுகள் பங்கேற்காததால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை என்று ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வாஷிங்டன், ‘ஜி-20’ கூட்டமைப்பின் இந்தாண்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. அதன்படி கடந்த ஓராண்டாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ‘ஜி-20’ தொடர்பான மாநாடுகள் நடந்தது. இறுதியாக ‘ஜி-20’ அமைப்பின் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் வரும் 9, 10 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்பட ‘ஜி-20’ உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் மாநாட்டில் பங்கேற்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.
அந்த வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 2 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது இன்று இந்தியா வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. மாநாட்டுக்கு முன்பாக நாளை அவர் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கடந்த 4ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஜோ பைடன் இந்தியா வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. எனினும் ஜோ பைடனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இந்த நிலையில் ஜோ பைடன் இந்தியா வருவதை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது. இதையடுத்து அவர் இன்று இந்தியாவுக்கு புறப்படுகிறார்.
இதனிடையே இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அவர்களின் பிரதிநிதிகள் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், “ஜி-20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்காததில் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதற்கு முன்பு பல்வேறு காலகட்டங்களில் சில ஜனாதிபதிகளும், பிரதமர்களும் ஜி-20 மாநாடுகளில் பங்கேற்பதை தவிர்த்திருக்கிறார்கள். ஆனால் அந்த நேரங்களில் குறிப்பிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் அந்தந்த நாடுகளின் நிலையை ஜி-20 மாநாட்டில் பிரதிபலித்து இருக்கிறார்கள்.
மாநாட்டிற்கு வருகை தருபவர்கள் அதற்கான தீவிரத்தன்மையை கொண்டிருப்பார்கள்’ என்றார்.இந்நிலையில் மாநாடு நடைபெறும் புதுடெல்லியை டெல்லி காவல்துறை தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்து கொண்டது. வெளிநாட்டு தலைவர்கள் வந்து தங்கும் ஓட்டல்கள் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டன. அந்த ஓட்டலின் நுழைவு வாயில்கள் முன் உள்ள சாலைகள் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநாடு நடைபெறும் பிரகதி மைதானத்தின் முன்புற சாலையும் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. நாளை, நாளை மறுநாள் மற்றும் 10ம் தேதி ஆகிய 3 நாட்களும் கடுமையான கட்டுப்பாடுகள் கையாளப்படுகிறது. இந்த 3 நாட்களும் மாநகரம் முழுவதும் போக்குவரத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. சுப்ரீம் கோர்ட், பட்டேல் சவுக், ஆர்.கே.ஆஸ்ரம் ஆகிய மெட்ரோ நிலையங்களில் வாகன நிறுத்தம் தடை செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டுக்கு வரும் தலைவர்கள் டெல்லியில் பல இடங்களையும் சுற்றி பார்ப்பார்கள் என்பதால் இந்த 3 நாட்களும் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி மாவட்டத்துக்குள் எந்த வணிக நிறுவனங்களும் செயல்படாது. உணவு வினியோகம் உள்ளிட்ட ஆன்லைன் வியாபாரம் எதுவும் நடைபெறாது. டெல்லி மக்கள் நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் பிக்னிக் என மன ஆறுதலுக்காக வந்து செல்லும் இடமும், சுற்றுலா பயணிகளின் வருகை தளமுமான கடமைப்பாதைக்கு இந்த 3 நாட்களில் யாருக்கும் அனுமதி இல்லை. இந்த 3 நாட்களும் விமான பயணம் மற்றும் ரயில் பயணத்துக்காக திட்டமிட்டிருப்பவர்கள் போக்குவரத்து ஆலோசனைகளை முன்கூட்டியே அறிந்து செயல்படுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்தில் மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு முதல் 10ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும். மேலும் இந்திய விமான படையை சேர்ந்த போர் விமானங்கள் உள்பட வான் வழியேயான கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாளை முதல் 10ம் தேதி வரை அதிகாலை 4 மணிக்கு ரயில் சேவை
புதுடெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த ரயில் நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் டெல்லியில் நாளை முதல் 10ம் தேதி வரை அதிகாலை 4 மணி முதல் ரயில் சேவை தொடங்கும் என டெல்லி மெட்ரோ அறிவித்துள்ளது. காலை 6 மணி வரை அனைத்து வழித்தடங்களிலும் அரை மணி நேர இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். காலை 6 மணிக்கு பிறகு வழக்கமான அட்டவணையின்படி இயங்கும் என தெரிவித்துள்ளது. வழக்கமாக அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கும் மெட்ரோ ரயில் சேவை ஜி20 மாநாட்டை முன்னிட்டு, அதிகாலை 4 மணி முதல் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
The post ஜி-20 உச்சி மாநாடு; சீனா, ரஷ்யா பங்கேற்காததால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை: வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி appeared first on Dinakaran.