கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரி நவீன இயந்திரம் மூலம் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் நகரின் மைய பகுதியிலுள்ள ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்வர். இந்த ஏரியில் களைச்செடிகள் மற்றும் நீர்வாழ் தாவரங்கள் வளர்ந்து ஏரியை மாசுபடுத்தி வருகின்றன. இந்த களைச்செடிகள் மற்றும் நீர் தாவரங்களை அப்புறப்படுத்தினாலும் மீண்டும் மீண்டும் ஆக்கிரமித்து வருகின்றன.
இதனால், இவற்றை நவீன இயந்திரம் மூலம் அகற்ற கொடைக்கானல் நகராட்சி நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து கேரள மாநிலத்தில் இருந்து களைச்செடிகள் மற்றும் நீர் தாவரங்களை அகற்றுவதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட நவீன இயந்திரத்தை நகராட்சி வாங்கியது. இதை முறையாக இயக்க கொடைக்கானல் நகராட்சி பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பயிற்சி பெற்ற பணியாளர்களை கொண்டு ஏரியில் களைச்செடிகள், நீர் தாவரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் செல்லத்துரை கூறுகையில், ‘நகராட்சியின் முக்கிய பகுதியாகவும் சுற்றுலா முக்கியத்துவம் உள்ள இந்த கொடைக்கானல் ஏரியை சிறப்பாக பாதுகாத்து நன்னீர் ஏரியாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாகத்தான் இந்த களைச்செடிகள் மற்றும் நீர் தாவரங்களை அகற்றுவதற்கு நவீன இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த இயந்திரத்தின் மூலம் களைச்செடிகள் மற்றும் நீர் தாவரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஏரி தூய்மையாக்கப்பட்டு வருகிறது. விரைவில் முற்றிலுமாக இந்த நீர் தாவரங்கள், களைச்செடிகள் அகற்றப்பட்டு ஏரி மிக அழகாக காட்சி தரும்’ என்றார்.
The post கொடைக்கானலில் நவீன இயந்திரம் மூலம் ஏரியில் தூய்மை பணி appeared first on Dinakaran.