×

நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில் மாரியம்மன் கோயிலில் ஒருதரப்பினர் சுவாமி கும்பிட வந்ததால் பரபரப்பு: பேளுக்குறிச்சி போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை

 


சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சியில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஒரு தரப்பினர் சுவாமி கும்பிட வந்ததால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மற்றொரு சமூகத்தினரை சுவாமி கும்பிட அனுமதிப்பதில்லை. இதுசம்பந்தமாக இருதரப்பினருக்கும் பிரச்னை ஏற்பட்டு ஒரு தரப்பினர் சுவாமி கும்பிட வரும்போது மற்றொரு தரப்பினர் தடுப்பதும் போலீஸ் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்துவதும் வாடிக்கையாக உள்ளது.

இதுசம்பந்தமாக நீதிமன்றத்தில் இருதரப்பினரும் வழக்கு தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்து நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் உடன்பாடு எட்டவில்லை. இந்தநிலையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் இன்று காலை கோயிலுக்குள் புகுந்து சுவாமி கும்பிட உள்ளதாக அறிவித்திருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பேளுக்குறிச்சி போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். பின்னர் பிரச்னைக்குரிய கோயிலுக்கு முன்பு 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ராசிபுரம் டிஎஸ்பி தமிழ்செல்வன் சம்பவ இடம் விரைந்து வந்தார். அப்போது, ஆண்கள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் கோயிலுக்குள் செல்வதற்காக அவர்களின் தெரு பகுதிகளில் இருந்து ஊர்வலமாக வந்தனர். அவர்களை மூப்பனார் கோயில் வளாகத்தில் போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால பேளுக்குறிச்சி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

The post நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில் மாரியம்மன் கோயிலில் ஒருதரப்பினர் சுவாமி கும்பிட வந்ததால் பரபரப்பு: பேளுக்குறிச்சி போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Swami ,Mariyamman temple ,Belukurichi ,Senthamangalam ,Mariamman temple ,
× RELATED சுவாமியே சரணமய்யப்பா: ஐயப்ப சுவாமி...