×

வரத்து குறைவால் விலை உயர்வு: தேங்காய் டன்னுக்கு ரூ3 ஆயிரம் அதிகரிப்பு

சேலம்: தமிழகத்தில் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், பூந்துறை, வெள்ளோடு, அரச்சலூர், காங்கேயம், ஈரோடு, கோபிச்செட்டிபாளையம், பர்கூர், காவேரிப்பட்டணம், சூளகிரி, ஓசூர், தர்மபுரி, சேலம் உள்பட பல் வேறு பகுதிகளில் தென்னைமரங்கள் அதிகளவில் உள்ளன. இந்த பகுதிகளில் ஆண்டு முழுவதும் தேங்காய் பறிக்கப்பட்டு தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், குஜராத், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்தாண்டு பெய்த மழையால் தேங்காய் விளைச்சல் அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த சில மாதமாக சேலம் மார்க்கெட்டுக்கு தேங்காய் வரத்து கூடியது. இதனால் தேங்காய் விலை சரிந்தது. இந்த நிலையில் தற்போது தேங்காய் வரத்து சற்று குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சேலத்தை சேர்ந்த தேங்காய் மொத்த வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 500 முதல் 600 டன் தேங்காய் விற்பனைக்கு வருகிறது. இங்கு விற்பனைக்கு வரும் தேங்காயை ஆத்தூர், மேட்டூர், மேச்சேரி, ஓமலூரை சேர்ந்த சில்லரை வியாபாரிகள் வாங்கிச் சென்று விற்பனை செய்கின்றனர். கடந்தாண்டு பெய்த தொடர் மழை காரணமாக தேங்காய் விளைச்சல் அதிகரித்தது. இதனால் விலை சரிந்து காணப்பட்டது. கடந்த ஆடி மாதத்தில் வரலாறு காணாத அளவில் டன் ₹19 ஆயிரமாக சரிந்தது. பின்னர், வரத்து குறைவால் விலை அதிகரித்து கடந்த வாரம் டன் ரூ21 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது.

நடப்பு ஆவணி மாதத்தில் முகூர்த்தங்கள், கோயில் திருவிழாக்களால் தேங்காய் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த வாரத்தை காட்டிலும் நடப்பு வாரத்தில் தேங்காய் விலை அதிகரித்துள்ளது. நடப்பு வாரத்தில் டன்னுக்கு ₹3 ஆயிரம் அதிகரித்து, இன்று காலை நிலவரப்படி டன் ₹24 ஆயிரத்திற்கு விற்கப் படுகிறது. சில்லரையில் ஒரு தேங்காய் ரூ8 முதல் ரூ20 வரை விற்பனை செய்யப்படுகிது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

The post வரத்து குறைவால் விலை உயர்வு: தேங்காய் டன்னுக்கு ரூ3 ஆயிரம் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Tamil Nadu ,Pollachi ,Udumalaipet ,Tarapuram ,Poonthurai ,Vellodu ,Arachalur ,Kangeyam ,Erode ,Gobichettipalayam ,Barkur ,Kaveripatnam ,Choolagiri ,Hosur ,
× RELATED அரசாணை விதிகளை பின்பற்றி மணல் விற்பனை...