×

சீனாவை 3 நாட்களாக உலுக்கியெடுக்கும் ஹைகுய் சூறாவளிப்புயல்; வாகனங்கள் சீறிப்பாய்ந்த தார்ச் சாலைகள் காட்டாறுகளாக மாறின..!!

ஃபுஜியான்: தைவானை உலுக்கி எடுத்த ஹைகுய் சூறாவளிப்புயல் சீனாவின் கடலோர மாகாணங்களை துவம்சம் செய்து வருகிறது. இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை அந்த மாகாணங்கள் சந்தித்துள்ளன. 3 நாட்களுக்கு முன்பு தைவானில் கரையை கடந்த ஹைகுய் சூறாவளிப்புயல், சீனாவின் தென் கிழக்கில் அமைந்துள்ள ஃபுஜியான் மற்றும் கவுகாங்டாக் மாகாணங்களை புரட்டி எடுத்து வருகிறது. புயல் காரணமாக கனமழை தொடர்வதால் வாகனங்கள் சீறி பாய்ந்து கொண்டிருந்த தார் சாலைகள், தற்போது தற்காலிக காட்டாறுகளாக மாறியுள்ளன.

சாலைகளில் ஓடும் வெள்ளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகளில் மழை, வெள்ளம் புகுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை படகுகள் மூலம் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர். பல இடங்களில் பெரும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன. ஃபுஜியான் மற்றும் கவுகாங்டாக் மாகாணங்களில் உள்ள 2 லட்சத்து 94 ஆயிரத்து 100 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சுமார் 10 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்களில் உள்ள பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. 2,540 வீடுகள் சேதமடைந்துவிட்டன. சுமார் 5 ஆயிரத்து 740 கோடி ரூபாய் பொருட்சேதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வாரம் இறுதிவரை கனமழை தொடரும் என்றும் தென் கிழக்கில் உள்ள பிற மாகாணங்களையும் புயல் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சீனாவை 3 நாட்களாக உலுக்கியெடுக்கும் ஹைகுய் சூறாவளிப்புயல்; வாகனங்கள் சீறிப்பாய்ந்த தார்ச் சாலைகள் காட்டாறுகளாக மாறின..!! appeared first on Dinakaran.

Tags : Typhoon ,China ,Fujian ,Haigui ,Taiwan ,Typhoon Haigui ,Dinakaran ,
× RELATED சீனாவில் மலைப்பாதை சாலை சரிந்து...