×

குவைத்தில் வேலைக்கு சென்று சம்பளம், உணவின்றி தவித்த தமிழக வாலிபர்கள் 19 பேர் மீட்டு சென்னை அழைத்து வரப்பட்டனர்: தமிழ்நாடு அரசு நடவடிக்கை


மீனம்பாக்கம்: குவைத் நாட்டில் வேலைக்கு சென்று, அங்கு உணவு, இருப்பிடம், போதிய சம்பளம் கிடைக்காமல் அவதிப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 19 வாலிபர்கள் மீட்கப்பட்டு, இன்று காலை விமானம் மூலமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை விமானநிலையத்தில் அமைச்சர் மஸ்தான் வரவேற்றார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போலி ஏஜென்டுகள் மூலம் ஏமாற்றப்பட்டு, குவைத்தில் போதிய சம்பளம், வேலை, உணவு, தங்குமிடம் இன்றி பரிதவித்த 19 தமிழக வாலிபர்களை, ஒன்றிய வெளியுறவுத் துறை மூலமாக தமிழ்நாடு அயலக நலத்துறை உரிய நடவடிக்கை எடுத்து சென்னைக்கு மீட்டு அழைத்து வந்துள்ளது. இவர்கள் அனைவரும் இன்று காலை குவைத்தில் இருந்து விமானத்தில் சென்னை வந்திறங்கினர். இவர்களை சென்னை விமானநிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தான்கூறியதாவது: தமிழகத்தின் அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் உள்பட 9 மாவட்டங்களில் இருந்து 19 பேர், தனியார் ஏஜென்டுகள் மூலமாக குவைத் நாட்டில் வேலைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளனர். அவர்களிடம் மாதம் ₹60 ஆயிரம் சம்பளம், உணவு, தங்குமிடம் இலவசம் என அனைத்து வசதிகளும் செய்து தருவதாக ஏஜென்டுகள் ஆசைவார்த்தை கூறி, சென்னையை சேர்ந்த ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனம், குவைத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு 2 ஆண்டு பணி ஒப்பந்தம் போட்டு 19 பேரையும் அழைத்து சென்றுள்ளனர். ஆனால், குவைத் நாட்டில் 19 பேருக்கு குறித்த சம்பளத்துக்கு பதிலாக வெறும் ₹18 ஆயிரம்தான் தந்துள்ளனர். கேட்டதற்கு, அவர்களின் தங்குமிடம், உணவுக்கான தொகை பிடிக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.

இதனால் 19 பேரும் தங்களின் சொந்த ஊரில் உள்ள வீட்டுக்கு பணம் அனுப்பமுடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. பின்னர் 19 பேருக்கும் ஓராண்டு பணி முடிந்ததும், அவர்களின் விசா புதுப்பித்தலுக்கு ₹1.25 லட்சம் பணம் கேட்டுள்ளனர். இதனால் தமிழகத்தை சேர்ந்த 19 பேரும், எங்களுக்கு வேலை வேண்டாம். எங்களை தமிழ்நாட்டுக்கு அனுப்பி விடுங்கள் என கேட்டுள்ளனர். இவர்களிடம் வாங்கிய பாஸ்போர்ட்டை திரும்ப கேட்டதற்கு, அவர்கள் ₹60 ஆயிரம் பணத்தை கேட்டுள்ளனர். இதனால் குவைத்தில் தமிழகத்தை சேர்ந்த 19 பேர் தங்கியிருந்த அறைகளின் மின்சாரத்தை துண்டித்து, உணவின்றி பெரிதும் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட 19 பேரும் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்துக்கும் குவைத்தில் உள்ள இந்திய தூதகர அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சகம் இணைந்து, குவைத்தில் உணவின்றி தவித்த 19 தமிழக வாலிபர்களை மீட்கும் பணிகள் நடைபெற்றன. பின்னர் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று, இன்று காலை குவைத்தில் மீட்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 19 வாலிபர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இவற்றை தவிர்க்க, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையில் வேலை தேடும் நபர்கள் முறையாக பதிவு செய்து வெளிநாடு செல்ல வேண்டும். எவ்வித தகவலும் விசாரிக்காமல் ஒருசில தனியார் ஏஜென்டுகள் மூலமாக வெளிநாட்டு வேலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். ஏற்கெனவே போலி வாக்குறுதிகள் மூலம் இளைஞர்களிடம் ஏமாற்றும் செயல்களில் ஈடுபட்ட திருச்சியை சேர்ந்த 2 இடைத்தரகர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

வேறு இடைத்தரகர்கள் யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் மஸ்தான் தெரிவித்தார். பின்னர், 19 பேரும் அயலக தமிழர் நலன் துறையில் வாகனங்களில் ஏற்றி சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

The post குவைத்தில் வேலைக்கு சென்று சம்பளம், உணவின்றி தவித்த தமிழக வாலிபர்கள் 19 பேர் மீட்டு சென்னை அழைத்து வரப்பட்டனர்: தமிழ்நாடு அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kuwait ,Chennai ,Tamil Nadu government ,Meenambakkam ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...