×

வழி நெடுக காட்டு நெல்லி

`வழிநெடுக காட்டுநெல்லி’ என காட்டுமல்லி பாடலை மாற்றிப்பாடத் தோன்றுகிறது வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே திப்பசமுத்திரம் பகுதியில் உள்ள மாணிக்கம்மாளின் நெல்லித்தோட்டத்திற்குள் உலவும்போது. 2 ஏக்கர் நிலத்தில் இயற்கையான சூழலில் வளர்ந்து பெருத்திருக்கின்றன காட்டுநெல்லி மரங்கள். அதில் கொத்துக்கொத்தாக காய்த்திருக்கின்றன நெல்லிக்காய்கள். தரையில் புற்கள் மண்டி பசுமையாக காட்சியளிக்கிறது. மாட்டுச்சாண உரம், பஞ்சகவ்யம் என இயற்கை இடுபொருட்களைக் கொண்டு சாகுபடி செய்வதால் வயல் ஒரு இயற்கை வனம்போலவே காட்சியளிக்கிறது. இந்தத் தோட்டத்தில் ஆண்டுக்கு 2 முறை மகசூல் எடுத்து லட்சத்தில் லாபம் பார்த்து வரும் மாணிக்கம்மாளைச் சந்தித்துப் பேசினோம்.

“எனது கணவர் குப்பன் உதவியோடு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக காட்டு நெல்லி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றேன். எங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் செம்மண் காட்டில்
காட்டு நெல்லியை பயிரிட்டு பராமரித்து வருகின்றேன். இதற்கென தனி விதைப்பு பட்டம் எல்லாம் கிடையாது. ஆனால், மழைக்கு முன்பாக ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் நடவு செய்தால் நல்ல விளைச்சலைப் பார்க்கலாம். எந்த மாதத்தில் நடவு செய்கிறோமோ அதற்கு இரண்டு மாதத்துக்கு முன்பு, ஒரு வார இடைவெளியில் 4 முறை உழவு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மரத்திற்கும் இடையில் 15 அடி இடைவெளிவிட்டு நடவு செய்துள்ளோம். மரக்கன்றுகளை நடவு செய்வதற்கு முன்பு மண்ணை நன்றாக பொலப்பொலப்பாக்கிக் கொள்வோம். பிறகு குழி தோண்டி மரக்கன்றுகளை நட்டு மாட்டு எருவை அடி உரமாக இடுவோம். இதனைத்தொடர்ந்து காலை, மாலை என இருவேளை தண்ணீர் பாய்ச்சுவோம். நெல்லி மரம் வளர்ந்து காய் காய்ப்பதற்கு கிட்டதட்ட 2 லிருந்து 3 வருடங்கள் வரை ஆகும். இதற்கிடையில் நாற்று நட்ட முதல் 3 வருடங்களில் நெல்லியில் ஊடுபயிராக உளுந்து, காராமணி, நிலக்கடலை ஆகியவற்றைப் பயிரிட்டிருந்தோம். பிறகு நெல்லிமரம் வளர்ந்து காய்கள் காய்க்கத் தொடங்கிய பின்னர் ஊடுபயிர்கள் அனைத்தையும் அறுவடை செய்தோம். இதில் வீட்டுத் தேவைக்கு போக மற்றவற்றை சந்தையில் விற்பனை செய்தோம். காட்டு நெல்லியை பொறுத்தவரையில் ஜூன் மாத இறுதியில் மரத்தில் பூ பூக்கத் தொடங்கிவிடும். அதன் பின்னர் நவம்பர் முதல் நெல்லிக்கனிகள் வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருக்கும். அதேபோல் ஜனவரியில் பூ பூத்தால் ஏப்ரல், மே வரை காய்கள் காய்த்து அறுவடைக்கு தயாராகிவிடும். ஒரு மரத்தில் ஒரு மரத்திலிருந்து 20 கிலோவிலிருந்து 30 கிலோ வரை நெல்லிக்காய்கள் கிடைக்கும். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு அறுவடைக்கு பின்னரும் கவாத்து செய்து 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினாலே போதுமானது. மரத்தின் வயதினைப் பொறுத்து கனிகள் அதிகம் கிடைக்கும்.

காட்டு நெல்லி என்பதால் இதனை அப்படியே சாப்பிட்டாலும், சமைத்து உண்டாலும், காய வைத்து பொடியாக்கி எடுத்துக்கொண்டாலும் அதிலுள்ள முழு பயனும் கொஞ்சமும் வீணாகாமல் அப்படியே கிடைக்கும். மேலும், இதில் மருத்துவக் குணங்கள் அதிகம் கிடைப்பதால் கேரள மாநிலத்திற்கு மருந்துகளை தயாரிக்க வியாபாரிகள் எங்களை தேடி வந்து மொத்தமாக காட்டு நெல்லிக்காய்களை வாங்கிச் செல்கிறார்கள்.
ஒரு அறுவடைக்கு சுமார் 70 லிருந்து 100 மூட்டைகள் வரை மகசூல் கிடைக்கும். வியாபாரிகளுக்கு ஒரு கிலோ ரூ.10 என்ற கணக்கில் விற்பனை செய்கிறோம். உரமிடுதல், பராமரிப்பு செலவுகள் போக ஒரு அறுவடைக்கு ரூ.50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது. ஆண்டுக்கு இரண்டு முறை அறுவடை செய்வதால் வருடத்திற்கு ரூ.1 லட்சம் லாபமாக கிடைக்கிறது. சீசனைப் பொறுத்து ஒரு கிலோ நெல்லி ரூ.15 வரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வோம். 12 வயதுள்ள மரத்தில் 80 முதல் 100 கிலோ வரை நெல்லிக்காய் கிடைக்கும்.

அனைத்து வேலைகளையும் நானும், எனது கணவருமே பார்த்துக் கொள்கிறோம். அதனால் கூலிச்செலவு கிடையாது. ஆடு, மாடுகளையும் வளர்த்து வருகிறோம். அவற்றை நெல்லி மரத்தின் கீழ் மேய்ச்சலுக்கு விட்டுவிடுவோம். அப்போது அவை வெளியேற்றும் கழிவுகள் மரங்களுக்கு உரமாகிவிடுகிறது. மாடுகளின் சாணம், கோமியம் மூலம் பஞ்சகவ்யம், புண்ணாக்கு கரைசல் போன்றவற்றையும் தயாரித்து பயன்படுத்துகிறோம். அதோடு மாட்டுச்சாணத்தைக் காயவைத்து உரமாக பயன்படுத்துகிறோம். இதனால் உரச்செலவும் பெரிதாக இல்லை. அதிக செலவு இன்றி நெல்லிக்காய் சாகுபடியில் லாபம் ஈட்ட முடிகிறது. இதை இன்னும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றினால் இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும்’’ என்கிறார் மாணிக்கம்மாள்.
தொடர்புக்கு:
மாணிக்கம்மாள்: 97863 81086

The post வழி நெடுக காட்டு நெல்லி appeared first on Dinakaran.

Tags : Manikkammal ,Dippasamudtham ,Vellore District Dammakkattu ,
× RELATED சொல்லிட்டாங்க…