திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் மகளின் திருமணம் நடந்த அதே நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கிய சென்னை வாகன உதிரி பாக கடை அதிபர் மனைவியுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு பகுதியைச் சேர்ந்தவர் சுகதன் (71). அவரது மனைவி சுனிலா (70). இந்த தம்பதிக்கு உத்தரா என்ற ஒரே ஒரு மகள் உண்டு. சுகதன் 30 வருடங்களுக்கும் மேலாக மஸ்கட்டில் பணிபுரிந்து வந்தார். பின்னர் ஊர் திரும்பினார். அதன் பிறகு சென்னையில் வாகன உதிரிபாக கடை நடத்தினார். இந்த தொழிலில் அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடையை மூடிவிட்டு குடும்பத்துடன் மீண்டும் திருவனந்தபுரத்துக்கு சென்றார். அங்குள்ள மலையின்கீழ் பகுதியில் ஒரு வீட்டைக் கட்டி குடியேறினார்.
இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து வீட்டை விற்று திருவனந்தபுரம் நகரில் பல்வேறு பகுதிகளில் வாடகை வீட்டில் குடி இருந்து வந்தார். சமீபத்தில் படிஞ்ஞாரேக்கோட்டையில் ஒரு வீட்டை வாங்கினார். இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் அவரது மகள் உத்தராவுக்கு திருமணம் நடந்தது. திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வைத்து மிகவும் தடபுடலாக திருமணத்தை சுகதன் நடத்தினார். இதனால் அவருக்கு கூடுதலாக கடன் நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த மாதம் 26ம் தேதி மகளின் திருமணம் நடந்த அதே நட்சத்திர ஓட்டலில் சுகதனும், மனைவி சுனிலாவும் அறை எடுத்து தங்கினர். வீட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சில நாட்கள் மனைவியுடன் ஓட்டலிலேயே தங்கப் போவதாக அங்கு இருந்த ஊழியர்களிடம் கூறி உள்ளனர்.
அதைத்தொடர்ந்து நேற்று மதியம் வரை கணவன்-மனைவி 2 பேரும் அதே ஓட்டலில் உணவு வாங்கி சாப்பிட்டு உள்ளனர். மாலையில் அறையை துப்புரவு செய்வதற்காக ஊழியர் சென்றுள்ளார். அப்போது நீண்ட நேரமாக தட்டி பார்த்தும் யாரும் கதவை திறக்க முன்வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஊழியர் கதவைத் திறந்து பார்த்துள்ளார்.அப்போது சுகதனும், சுனிலாவும் ஒரே துப்பட்டாவில் தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டனர். தகவலறிந்த போலீசார் ஓட்டலுக்கு விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொருளாதார நெருக்கடி காரணமாக 2 பேரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மகளின் திருமணம் நடந்த நட்சத்திர ஓட்டலில் சென்னை தொழிலதிபர் கேரளாவில் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.