
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே டாட்டூ குத்தியதால் உடல் பாதிப்பு ஏற்பட்டு இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கழுத்து போன்ற பகுதிகளில் டாட்டூ போட்டு கொள்ளுவோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மூங்கில்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பரத் முதுகலை ஆங்கில கல்வி படித்து வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன் பாண்டிச்சேரி சுற்றுலா சென்ற பரத் அங்கு நண்பர்களுடன் ஒரு டாட்டூ மையத்தில் கழுத்து பகுதியில் நங்கூரம் படத்தை குத்தி கொண்டுள்ளார்.
வீடு திரும்பிய பரத் விவசாய பணிகளில் ஈடுபட்ட நிலையில் பச்சைகுத்திய பகுதியில் கட்டி ஏற்பட்டுள்ளது. கட்டி பெரிதாகி வலியால் துடித்தவரை அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சீழ் பிடித்திருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர். ஆனால் வீடு திரும்பியவர் திடீரென மயங்கி விழுந்ததால் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அதே நேரத்தில் பாண்டிச்சேரியில் பரத்துடன் சென்று டாட்டூ குத்திக்கொண்ட அவரது மற்ற நண்பர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை தஞ்சாவூர் மருத்துவமனையில் பரத்தை பரிசோதித்த மருத்துவர்கள் டாட்டூ குத்தியதால் ரத்தத்தில் தட்டை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து ரத்த அழுத்த குறைவு ஏற்பட்டதாக கூறியுள்ளனர். இதனால் மருந்துகளை உடல் ஏற்றுக்கொள்ளாமல் சிகிச்சை பலனின்றி பரத் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நோய் எதிர்ப்புசத்தி இல்லாதோர், நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சைகுத்திக்கொள்ள வேண்டாம் என அரசு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தசை பகுதியில் குத்தப்படும் டாட்டூவினால் பாதிப்பு ஏற்படாது என்று கூறியுள்ள மருத்துவர்கள், ஆனால் கழுத்து பகுதியில் கவனமாக குத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். ஏனென்றால் மூளை, இதயம் தொடர்புடைய பிரதான நரம்புகள் உள்ள பகுதி என்பதால் அவற்றில் பாதிப்பு ஏற்பட்டால் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர். தற்போதைய இளைஞர்களிடம் டாட்டூ மோகம் அதிகரித்துள்ளது. அந்த இளைஞர்கள் மருத்துவ ரீதியிலும் கவனமாக இருப்பதன் மூலம் உயிரிழப்பை தடுக்கலாம் என்பதே மருத்துவர்களின் ஆலோசனையாக உள்ளது.
The post டாட்டூ குத்துபவர்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தல்: பெரம்பலூர் அருகே டாட்டூ குத்திய மாணவர் திடீர் உயிரிழப்பு appeared first on Dinakaran.