×

சென்னை காமராஜர் சாலையில் ரூ.9.82 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சமூக நல இயக்குநர் அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார்: முதல்வர்

சென்னை: சென்னை காமராஜர் சாலையில் ரூ.9.82 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சமூக நல இயக்குநர் அலுவலகக் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (7.9.2023) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் சென்னை, காமராஜர் சாலையில் 9 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சமூக நல இயக்குநர் அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தார்.

மாநிலத்தின் அனைத்து வளர்ச்சியிலும் பெண்களுக்கு உரிய இடம் வழங்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை என்ற பெயரை “சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை” என மாற்றம் செய்து, பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள், திருநங்கையர் போன்றவர்களின் நலனை காத்திடும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் மகளிரின் கல்வி, சுகாதாரம், குடும்ப வாழ்க்கை, பொருளாதாரம் மற்றும் சம உரிமைகளை உறுதிப்படுத்த சமூக நல இயக்ககம் செயல்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உறுதி செய்யும் தொட்டில் குழந்தை திட்டம், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் புதுமைப்பெண் திட்டம், திருமண உதவித் திட்டங்கள், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளிக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டம், இலவச சீருடை தைத்து வழங்கும் திட்டம், திருநங்கையருக்கு அடையாள அட்டை வழங்குதல், தொழில் தொடங்கிட மானியம் வழங்குதல், 40 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்குதல், முதியோர் இல்லம் நடத்துதல், குழந்தைகள், பெண்கள், முதியோர் நலத்திற்கு கூடுதல் பலன் சேர்க்கும் விதமாக சமூக நீதிச் சட்டங்களான வரதட்சணை ஒழிப்புச் சட்டம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், பணிபுரியும் இடங்களில் பெண்களை பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலச் சட்டம் ஆகியனவும் சமூக நல இயக்ககத்தால் செயல்படுத்தப்படுகின்றன.

இத்தகைய முக்கியவத்தும் வாய்ந்த சமூக நல இயக்ககத்திற்கு சென்னை, காமராஜர் சாலையில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன், 26,044 சதுர அடி பரப்பளவில் 9 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சமூக நல இயக்குநர் அலுவலகக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இக்கட்டடத்தில் சுமார் 120 பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பணிபுரியும் வகையில் அலுவலகக் கட்டடங்கள், இரண்டு கூட்டரங்குகள், மின்தூக்கி வசதி உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன், தலைமைச் செயலாளர்சிவ் தாஸ் மீனா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சமூக நலத்துறை ஆணையர் வே. அமுதவல்லி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கூடுதல் இயக்குநர் ச.ப. கார்த்திகா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னை காமராஜர் சாலையில் ரூ.9.82 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சமூக நல இயக்குநர் அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார்: முதல்வர் appeared first on Dinakaran.

Tags : Director of ,Social ,Welfare ,Chennai Kamarajar Road ,Chennai ,Chief Minister ,Mukhera ,Director of Social ,Kamarajar Road ,G.K. Stalin ,Dinakaran ,
× RELATED கிண்டி காந்தி மண்டப வளாகத்தில்...