
திருச்சுழி, செப்.7: திருச்சுழியில் உள்ள தனியார் மண்டபத்தில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த செல்லும் நபர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் செல்வது குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. திருச்சுழி டி.எஸ்.பி ஜெகநாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில் திருச்சுழி மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் டி.எஸ்.பி ஜெகநாதன் பேசும்போது, வருகின்ற செப்.11ல் தியாகி இமானுவேல் சேகரனின் குருபூஜை விழா நடைபெறுகிறது.
இதனையொட்டி திருச்சுழி மற்றும் நரிக்குடி வழியாக மாவட்ட எல்லையான மானாசாலை சோதனைச்சாவடியை கடந்து சென்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெறவுள்ள இமானுவேல் சேகரனின் குருபூஜை விழாவிற்கு அஞ்சலி செலுத்த வாகனங்களில் வருவோர் முறையான அனுமதி பெற்று அரசு வகுத்துள்ள வழித்தடங்களில் வர வேண்டும். அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி அமைதியான முறையில் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பி வர அனைவரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டத்தில் திருச்சுழி சரக இன்ஸ்பெக்டர் மணிகண்டன், நரிக்குடி சரக இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், சமுதாய தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
The post இமானுவேல் சேகரன் நினைவுநாள் திருச்சுழியில் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.