×

நாகையில் தொடர் விடுமுறை திருச்சி, சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் போக்குவரத்து மேலாண் இயக்குநர் தகவல்

நாகப்பட்டினம்,செப்.7: ‘‘நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர் விடுமுறையை முன்னிட்டு குடந்தை கோட்டம் சார்பில் திருச்சி, சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்,’’ என குடந்தை போக்குவரத்து மேலாண் இயக்குநர் மோகன் தெரிவித்தார்.நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று(6ம் தேதி) முதல் வரும் 10ம் தேதி வரை விடுமுறை தினமாக உள்ளது. இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து வெளியூர் செல்லவும், வெளியூரில் இருந்து நாகப்பட்டினம் மாவட்டம் வருவதற்கு வசதியாக குடந்தை கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து நாகப்பட்டினம் வருவதற்கும், செல்வதற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

அதே போல் சென்னை, மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர் ஊர்களுக்கும் நாகப்பட்டினத்தில் இருந்து செல்லவும், வருவதற்கும் குடந்தை கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இரவு, பகலாக இயக்கப்படுகிறது. இதை தவிர வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி இன்று(7ம் தேதி) இரவு நடைபெறுகிறது. நாளை(8ம் தேதி) அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.

பக்தர்கள் நலன் கருதி குடந்தை கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களில் இருந்தும் 24 மணி நேரமும் வேளாங்கண்ணிக்கு தினந்தோறும் 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் சென்னை, புதுச்சேரி, திண்டுக்கல், கரூர், திருச்சி, மதுரை உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் இயக்கப்படுவதால் பக்தர்கள் சிரமம் இன்றி பயணம் செய்யலாம். அதே போல், அனைத்து பஸ்ஸ்டாண்டுகளிலும் வேளாங்கண்ணி சிறப்பு பஸ் வசதி குறித்து தகவல் அறிந்து கொள்ள சேவை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post நாகையில் தொடர் விடுமுறை திருச்சி, சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் போக்குவரத்து மேலாண் இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Trichy ,Nagai ,of ,Nagapattinam ,Kudantai Kotam ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னை...