×

இன்று ஆசியான் உச்சி மாநாடு இந்தோனேசியா புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி

புதுடெல்லி: ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவுக்கு புறப்பட்டு சென்றார். இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் 20வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடும், கிழக்காசிய உச்சி மாநாடும் இன்று நடக்க உள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று இரவு 8 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.

ஏழு மணி நேர விமான பயணம் மூலம், இன்று அதிகாலை 3 மணிக்கு ஜகார்த்தா சென்றடையும் பிரதமர் மோடி, ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து இந்திய நேரப்படி காலை 8.45 மணிக்கு கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். மாநாடு முடிந்த உடனே உடனடியாக காலை 11.45 மணிக்கு மீண்டும் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்படுகிறார். டெல்லியில் நடக்க உள்ள ஜி20 மாநாட்டிற்காக வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி நாளை இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளார்.

ஜகார்த்தா புறப்படும் முன்பாக பிரதமர் மோடி விடுத்த அறிக்கையில், ‘‘ஆசியான் நாடுகளுடனான நட்புறவு இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் முக்கிய தூணாகும். உணவு, எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் பரிமாற்றம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து கிழக்காசிய மாநாட்டில் விவாதிக்க ஆவலுடன் உள்ளேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

The post இன்று ஆசியான் உச்சி மாநாடு இந்தோனேசியா புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,ASEAN Summit ,Indonesia ,New Delhi ,Modi ,Jakarta ,ASEAN-India Summit ,Dinakaran ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...