
சண்டிகர்: எதிர்க்கட்சி இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் சமீபத்தில் மும்பையில் நடந்தது. இதில் பாஜவுக்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் பொது வேட்பாளரை நிறுத்துவது என தீர்மானம் நிறைவேறியது. இந்நிலையில், பஞ்சாப் மாநில அமைச்சர் அன்மோல் காகன் மான் நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ பாஜவை எதிர்க்க பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. ஆனால் பஞ்சாப்பில் காங்கிசுரடன் ஆம் ஆத்மி கூட்டணி இல்லை.
இதனை முதல்வர் பகவந்த் மான் தெளிவுபடுத்தியுள்ளார். வரும் மக்களவை தேர்தலில் பஞ்சாப்பில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும். காங்கிரசுடன் எந்த தொகுதி பங்கீடும் கிடையாது’’ என்றார்.
காங்கிரஸ் கட்சியிலும் எதிர்ப்பு
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வாரிங் கூறுகையில்,‘‘ மாநிலத்தின் 13 தொகுதிகளிலும் போட்டியிட தயாராகுமாறு கட்சியின் தேசிய தலைமை வலியுறுத்தியுள்ளது. மாநிலத்தில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் மக்கள் பிரச்னைகளை எழுப்பி வருகிறது. தொகுதி பங்கீடு பற்றி எங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கூட்டணி குறித்து மாநில தலைமையை கலந்தாலோசிக்காமல் கட்சி மேலிடம் எந்த முடிவையும் எடுக்காது என நம்புகிறேன்’’ என்றார்.
The post பஞ்சாபில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை: ஆம் ஆத்மி தலைவர் தகவல் appeared first on Dinakaran.