×

திருவிக நகர் மண்டலத்தில் ₹85 கோடி செலவில் 741 உட்புற சாலைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்: பருவ மழைக்குள் முடிக்க அதிகாரிகள் திட்டம்

பெரம்பூர், செப். 7: திருவிக நகர் மண்டலத்தில் ₹85 கோடி செலவில் 741 உட்புற சாலைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பருவ மழைக்குள் இந்த பணிகளை முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.சென்னையில் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல இடங்களில் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. குறிப்பிட்ட இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மழைநீர் வடிகால்வாய் பணிகள் நிறைவடைந்தவுடன் அந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது சென்னையில் உள்ள பழைய சாலைகள் அனைத்தையும் புதிய சாலைகளாக மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் பருவமழை தொடங்க உள்ளதால் பணிகளைப் துரிதப்படுத்த மாநகராட்சி திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

அந்த வகையில் சென்னை திருவிக நகர் 6வது மண்டலத்தில் சுமார் ₹85 கோடி மதிப்பீட்டில் 741 உட்புற சாலைகள் போடும் பணிகள் தீவிரபடுத்தப்பட்டு வருகின்றன. திருவிக நகர் மண்டலத்தில் கொளத்தூர், திருவிக நகர் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. இதில் 15 வார்டுகள் உள்ளன. கொளத்தூர் மற்றும் திருவிக நகர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற மழைநீர் வடிகால்வாய் பணிகள் முடிவடைந்து தற்போது அந்த இடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 540 உட்புற சாலைகள், திருவிக நகர் சட்டமன்ற தொகுதியில் 201 உட்புற சாலைகள் என மொத்தம் 741 சாலைகள் போடும் பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது 270 சாலை பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளன.

இதில் 614 தார் சாலைகளும், 93 கான்கிரீட் சாலைகளும், இன்டர் லாக்கிங் பிளாக்கிங் சிஸ்டம் எனப்படும் தொழில்நுட்பத்தில் 34 சாலைகளும் போடப்படுகின்றன. ஏற்கனவே போடப்பட்ட தார் சாலைகளை நன்கு சுரண்டி, மில்லிங் செய்துவிட்டு புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி புதிய தார் சாலைகள் போடப்பட்டு வருகின்றன. 160 டிகிரியில் தார் கலவை கலக்கப்பட்டு அது சாலை போடும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டு, 120 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் தார் சாலையில் போடப்படுகின்ற 40 எம்.எம். தர அளவில் இந்த சார் சாலைகள் அனைத்தும் போடப்படுகின்றன. இதே போன்று ஏற்கனவே கான்கிரீட் சாலைகள் அமைந்துள்ள இடங்களில் 80 சதவீதம் சாலைகள் பழுதடைந்திருந்தால் அந்த சாலைகளை சுரண்டி எடுத்துவிட்டு, மீண்டும் புதிய சாலைகள் போடப்பட்டு வருகின்றன.

முதலில் அந்த சாலைகளை சமன்படுத்தி 150 எம்எம் என்ற அடிப்படையில் கான்கிரீட் சாலைகள் போடப்பட்டு வருகின்றன. திருவிக நகர் மற்றும் கொளத்தூர் பகுதியில் தார் சாலைகள் மற்றும் கான்கிரீட் சாலைகள் போட வசதி இல்லாத மிகவும் குறுகலான இடங்களில் இன்டர் லாக்கிங் பிளாக்கிங் சிஸ்டம் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறிய அளவிலான கற்களைக்கொண்டு சாலைகள் போடப்பட்டு வருகின்றன. இவ்வாறு திருவிக நகர் மண்டலத்தில் தார் சாலைகள், கான்கிரீட் சாலைகள் மற்றும் இன்டர் லாக்கிங் பிளாக்கிங் சிஸ்டத்தால் போடப்படும் சாலைகள் என 3 வகையான சாலைகள் போடப்பட்டு வருகின்றன. இந்த சாலைகள் போடும் பணிகளை திட்ட மேலாண்மை கலந்தாளுனர் குழுவினர் தினமும் வந்து பார்வையிட்டு செல்கிறார்கள். இந்த சாலைகள் போடும் பணிக்காக நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட 3 திட்டங்களில் அனுமதி வாங்கி நிதி பெறப்பட்டுள்ளது.

தற்போது சாலை அமைக்கும் இடங்களில் மழை நீர் வடிகால் பணிகள் முழுவதுமாக முடிந்துள்ளன. குறிப்பிட்ட அந்த இடங்களில் சாலை அமைக்கும்போது சாலையோரங்களில் மழைநீர் வடிகால்வாய் பள்ளங்களின் அருகே மழைநீர் செல்லும்போது மழை நீரில் வண்டல் மண் கலந்து வருகிறது. அதனை தனியாகப் பிரித்து தண்ணீர் மட்டும் செல்வதற்கு பிரத்யேக வழிமுறை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மழைநீர் வடிகால் உட்புறத்தில் மணல் தேங்கி அடைப்பு ஏற்படாமல் இருக்கும். பருவ மழை தொடங்க உள்ளதால் அக்டோபர் மாத இறுதிக்குள் திருவிக நகர் மண்டலத்தில் அனைத்து சாலைகளையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக திருவிக நகர் மண்டலத்தில் பணிபுரியும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post திருவிக நகர் மண்டலத்தில் ₹85 கோடி செலவில் 741 உட்புற சாலைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்: பருவ மழைக்குள் முடிக்க அதிகாரிகள் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Tiruvik Nagar ,Perambur ,Tiruvik Nagar zone ,
× RELATED திரு.வி.க நகர் காவல் நிலையத்தில்...