×

திருப்போரூர் முருகன் கோயில் நிர்வாகம் கிராம மக்களின் நிலங்களை ஏலம் விடுவதை நிறுத்த வேண்டும்: கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

செங்கல்பட்டு, செப்.7: திருப்போரூர் முருகன் கோயில் நிர்வாகம், கிராம மக்களின் நிலங்களை ஏலம் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என, கலெக்டர் ராகுல் நாத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கிராமத்தில் நிரந்தரமாக வசித்து வரும் விவசாயிகளுக்கு சொந்தமான நிலத்தை திருப்போரூர் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு எங்களுடைய சுவாதீனத்திலும், அனுபவத்திலும் மற்றும் சர்க்காரின் பதிவு துறையில் பரிவர்த்தனை செய்தும், ஆண்டும் அனுபவித்தும் தொடர்ச்சியாக இந்நாள் வரை எவ்வித இடையூறுமின்றி விவசாயம் செய்து வருகின்றோம். இந்த நிலமானது வரி வசூல் செய்து, சர்க்காரிடம் செலுத்தி, கமிஷன் அடிப்படையில் ஏஜெண்டாக பணிபுரிந்த நிர்வாகம் விவசாயிகளையும், குடியிருப்போர்களையும் வஞ்சித்து கந்தசாமி கோயில் பெயரில் 1ம் எண் பட்டாவாக மாற்றி தவறான தகவல்களை அளித்து பதிவு செய்து பெற்றுள்ளது.

திருப்போரூர் கந்தசாமி கோயில் நிர்வாகம் 1987ம் வருடம் செங்கல்பட்டு மாவட்ட முன்சீப் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் டெஸ்டிங் கேஸ் என்று சொல்லி நில உரிமையாளர்களான 3 விவசாயிகள் மீது செங்கல்பட்டு முன்சீப் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்தது. இவ்வழக்குகளில் முன்சீப் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய பொது தீர்ப்பில் இந்த நிலங்களில் கோயிலுக்கு எந்தவிதமான பாத்தியதையும் இல்லை என்றும், இந்த நிலங்களின் மீது எந்தவித உரிமையற்றவர்கள் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பில், மிராசுதாரர் ஸ்ரீ கந்தசாமியார் தேவஸ்தானம் திருப்போரூர் கிராமத்தின் வரி வசூல் செய்யும் ஏஜெண்டாக மட்டுமே செயல்பட்டு வந்துள்ளார் என்பதையும், மேலும் சட்டத்தின் அடிப்படையிலும், தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையிலும் இந்நிலங்களின் உரிமையாளர்கள் விவசாயிகள் தான் என்பதையும் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளார்கள்.

மேலும், இவ்வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் திருப்போரூர் கிராமத்தில் உள்ள சுமார் 400 ஏக்கர் நிலங்களில் 288 பேர் விவசாயம் செய்கிறார்கள். அவர்களுக்கு பட்டா வழங்கியுள்ளோம். அதன் மற்றொரு பிரதி தங்களிடம் உள்ளது என்பதையும், விவசாயிகளிடம் இருந்து நாங்கள் கிஸ்தி தான் வசூலித்தோம் என்பதையும், குத்தகை விட்டதற்கான ஆவணங்கள் எங்களிடம் எதுவும் இல்லை என்பதையும் கோயில் நிர்வாகம் ஒப்புக்கொண்டு பிரமாண பத்திர வாக்குமூலம் அளித்துள்ளது. இந்த வழக்கானது உயர்நீதிமன்றம் அடுத்ததாக உச்ச நீதிமன்றம் வரை சென்று பின்பு மறு விசாரணைக்காக உயர் நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது. இவ்வாறு ஒன்றாம் எண் பட்டாவிற்கு எதிரான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் எங்களுக்கு சொந்தமான, நிலங்களை சட்டத்திற்கு விரோதமாக கைப்பற்றி அதை ஏலம் விட முயற்சி செய்கிறது.

பதிவு செய்த மூல ஆவணங்கள் ஏதும் இல்லாமல் பட்டா ஒன்றை மட்டும் வைத்து நில உரிமையை கோர முடியாது என்று மதுரை உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால், கோயில் நிர்வாகம் எஸ்டேட் தாரர்களுக்கு கொடுக்கப்பட்ட ஏஜென்ட் பட்டா என்ற ஒன்றை வாய்மொழியாக மட்டுமே கூறிக்கொண்டு எந்தவித உரிமை மூல ஆவணங்கள் எதும் இல்லாமல் திருப்போரூரில் உள்ள பெரும்பாலான விவசாய நிலங்களையும் தனி நபருக்கு சொந்தமான குடியிருப்பு நிலங்களையும் அதிகார துஷ்பிரயோகத்தால் கபளிகரம் செய்துவருகிறது.

நிலுவையில் உள்ள 1ம் எண் பட்டாவிற்கு எதிரான வழக்குகள் அனைத்தும் முடியும் வரை குடிமக்களுக்கு சொந்தமான நிலங்களை பறிப்பதையும் அவற்றை ஏலம் விடமுயற்சி செய்வதையும் தடுத்து நிறுத்திட வேண்டும். திருப்போரூர் கிராமத்தின் ஒட்டுமொத்த நிலங்களையும் சிறப்பு குழு ஒன்றை அமைத்து கள ஆய்வும், ஆவண ஆய்வும் நீதி விசாரணையும் செய்து எங்களின் சொத்துரிமை பாதிக்கப்படாமல் நில உரிமையாளர்கள் அனைவருக்கும் அவரவர் பெயரில் பட்டா வழங்கி விவசாயிகளின், குடியிருப்போரின் வாழ்வாதாரம் அழிந்து விடாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருப்போரூர் முருகன் கோயில் நிர்வாகம் கிராம மக்களின் நிலங்களை ஏலம் விடுவதை நிறுத்த வேண்டும்: கலெக்டரிடம் பொதுமக்கள் மனு appeared first on Dinakaran.

Tags : Tiruppurur Murugan Temple administration ,Chengalpattu ,Tiruporur Murugan Temple administration ,
× RELATED செங்கல்பட்டு, திருவள்ளூர்...